Published : 19 Jun 2020 02:53 PM
Last Updated : 19 Jun 2020 02:53 PM

அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைக்காதது ஏன்? - மத்திய அரசு மீது ஆம் ஆத்மி கடும் சாடல்

சீனாவுடனான மோதல் தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் விவாதம் நடத்தும் பிரதமர் மோடி திட்டமிட்டே முக்கிய கட்சிகளை புறக்கணித்துள்ளார் என ஆம் ஆத்மி கட்சி விமர்சித்துள்ளது.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். அதேபோல சீனா தரப்பிலும் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வந்தாலும் சீனா அதிகாரபூர்வமாக வெளியிட மறுக்கிறது.

கடந்த 50 ஆண்டுகளில் இரு நாடுகளின் ராணுவத்துக்கு இடையே நடந்த மிகப்பெரிய தாக்குதலாகப் பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி மாலை ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் அதிமுக, திமுக உட்பட 20-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதில் ஆம் ஆத்மி உட்பட சில கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. நாடாளுமன்றத்தில் போதிய உறுப்பினர்கள் உள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் கூறுகையில் ‘‘அனைவருக்கும் வாய்ப்பு, அனைவருக்கும் வளர்ச்சி என பாஜகவினர் பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் செயல் வேறாக உள்ளது. சீனாவுடனான மோதல் தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் விவாதம் நடத்தும் பிரதமர் மோடி திட்டமிட்டே முக்கிய கட்சிகளை புறக்கணித்துள்ளார். எங்களை அழைக்காததற்கு என்ன காரணம்’’ எனக் கூறினார்.

இதுபோலவே ராஷ்ட்ரீய ஜனதாதளக் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவும், அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படாததற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x