

எல்லையைப் பாதுகாக்க ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரை அனுப்பலாமே, அவர்கள் எல்லையைக் காப்பார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ஹுசைன் தால்வாய் கிண்டல் செய்ததோடு மத்திய அரசைக் கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார்.
சீன வீரர்களுடன் பேச்சு நடத்த ஆயுதமில்லாமல் நிராயுதபாணியாகவா வீரர்களை அனுப்புவார்கள் என்று ஹுசைன் தால்வாய் கூறியுள்ளார்.
லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் சீனத் தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தனர், பலர் காயமடைந்துள்ளனர் சீனா தரப்பிலும் உயிர்ச்சேதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் ஹுசைன் தால்வாய் கூறும்போது, “அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முன்னாலேயே கூட்டியிருக்க வேண்டும். நம் படை வீரர்கள் 20 பேர் உயிர்த்தியாகம் செய்திருப்பது துரதிர்ஷ்டமானது. நம் வீரர்கள் ஆயுதமில்லாமல் சென்றனர், ஆனால் சீன தரப்பினர் ஆணி பொருத்திய ராடுகளுடன் வந்துள்ளனர். நம் வீரர்கள்தான் இறந்தனர். அவர்கள் தரப்பில் யாரும் உயிரிழக்கவில்லை.
நம் வீரர்களை எப்படி ஆயுதம் இல்லாமல் அனுப்பலாம்? நிச்சயம் சண்டையிட்டிருப்பார்கள். ஆனால் ஆயுதம் இல்லாததால் சண்டையிட வாய்ப்பில்லாமல் போனது. குச்சி மட்டும் வைத்திருந்தார்கள், இதென்ன ஆர்.எஸ்.எஸ். ஷாகாவா? ஏன் வீரர்களை அனுப்ப வேண்டும்? ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரை அனுப்பியிருக்கலாமே, இவர்கள் பாதுகாப்பார்கள் எல்லையை” என்று சாடினார்.
பிரதமரின் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.