

இந்தியா-சீனா மோதல் விவகாரம் தொடர்பாக இன்று மாலை பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, இதில் ஆம் ஆத்மி, ராஷ்ட்ரிய ஜனதாதளக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப் படாததால் அக்கட்சிகள் கோபமடைந்துள்ளன.
ஆர்ஜேடி, ஆம் ஆத்மி தவிர மற்ற எல்லா கட்சிகளுக்கும் ராஜ்நாத் சிங் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி அழைப்பு விடுத்தார்.
இதனையடுத்து ஆர்ஜேடியின் தேஜஷ்வி யாதவ், ‘எந்த அடிப்படையில் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது அளவுகோல் என்ன என்று கேட்டுள்ளார். மேலும் அவர் கேள்வி எழுப்பிய போது, “பிஹாரில் பெரிய கட்சி ராஷ்ட்ரிய ஜனதா தளம், நாடாளுமன்றத்தில் 5 எம்.பி.க்கள் இருக்கின்றனர். ஆனால் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பில்லை, நாட்ட உலுக்கும் சீனாவுடனான மோதல் விவகாரத்தில் எங்களுக்கும் கருத்து உள்ளதே, ஏன் அழைப்பில்லை? ராஜ்நாத் சிங் விளக்குவாரா?” என்று கேள்வி எழுப்பினார்.
மற்றொரு ஆர்ஜேடி தலைவர் மனோஜ் குமார் ஜா, ‘நாடாளுமன்றத்தில் 5 என்ற எண்ணிக்கை புனைவு போலும், யாராவது விசாரித்துச் சொல்லுங்களேன்’ என்று நக்கலடித்துள்ளார்.
அழைப்பில்லாததால் ஏமாற்றமடைந்த ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங், “மத்தியில் விசித்திரமான ஈகோ பிடித்த அரசு ஆள்கிறது. ஆம் ஆத்மி டெல்லியில் ஆளும் கட்சி, பஞ்சாபில் எதிர்க்கட்சி, இந்தியா-சீனா எல்லை மோதல் போன்ற முக்கிய விவகாரத்தில் ஆம் ஆத்மியின் கருத்துகள் தேவையில்லையா? பிரதமர் அந்தக் கூட்டத்தில் என்ன கூறப்போகிறார் என்று நாடு ஆவலுடன் எதிர்பார்க்கிறது” என்றார்.