இந்திய வீரர்கள் மீது சீனா நடத்தியது திட்டமிட்ட தாக்குதல்; மத்திய அரசு தூங்கிவிட்டது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம்
Updated on
1 min read

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய ராணுவத்தினர் மீது சீனா நடத்தியது திட்டமிட்ட தாக்குதல். மத்திய அரசு வேகமாகத் தூங்கிவிட்டு, பிரச்சினையை அறிய மறுக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

கல்வானில் இந்தியா-சீனா மோதல் தொடர்பாக இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இந்தக் குற்றச்சாட்டை வைத்துள்ளார்

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். அதேபோல சீனா தரப்பிலும் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வந்தாலும் சீனா அதிகாரபூர்வமாக வெளியிட மறுக்கிறது.

கடந்த 50 ஆண்டுகளில் இரு நாடுகளின் ராணுவத்துக்கு இடையே நடந்த மிகப்பெரிய தாக்குதலாகப் பார்க்கப்படுகிறது.

இந்தத் தாக்குதல் தொடர்பாக மத்திய அரசு முன்னெச்சரிக்கையுடன் செயல்படவில்லை என்று குற்றம்சாட்டி வந்த ராகுல் காந்தி, சீனா திட்டமிட்டு இந்திய ராணுவ வீரர்களைக் கொலை செய்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி இன்று ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் ஸ்ரீபாட் நாயக்கின் பேட்டியையும் இணைத்து கருத்துப் பதிவிட்டுள்ளார்.

“தெள்ளத்தெளிவாக இப்போது தெரிந்துவிட்டது. கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்தினர் மீது சீன ராணுவம் நடத்திய தாக்குதல் திட்டமிட்ட தாக்குதல். இந்திய அரசு வேகமாகத் தூங்கிவிட்டது. பிரச்சினையை அறிய மறுக்கிறது. இந்திய அரசு தூங்கியதற்கு நமது வீரர்களின் உயிர் விலையாகக் கொடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் ஸ்ரீபாட் நாயக் அளித்த பேட்டியில், “சீன ராணுவம் திட்டமிட்டு இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம்” எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே ராகுல் காந்தி நேற்று ட்வி்ட்டரில் பதிவிட்ட கருத்தில், “இந்திய ராணுவ வீரர்கள் லடாக் எல்லைக்குச் செல்லும்போது ஏன் நிராயுதபாணியாக உயிர்த்தியாகம் செய்ய அனுப்பப்பட்டார்கள். நிராயுதபாணியாகச் சென்ற இந்திய ராணுவ வீரர்களைக் கொல்வதற்கு சீன ராணுவத்துக்கு எவ்வாறு துணிச்சல் வந்தது” எனக் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in