இந்திய-சீனப் படைகள் மோதல்: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணி தொடங்குவது நிறுத்தம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய, சீன ராணுவத்தினர் இடையே நடந்த மோதலால் பதற்றம் அதிகரித்து இருப்பதையடுத்து, அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியை நிறுத்தி வைத்துள்ளதாக ராமர் கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியும், கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

அயோத்தியில் 5 ஏக்கர் நிலத்தை மசூதி கட்டுவதற்காக உத்தரப் பிரதேச அரசு சன்னி வக்பு வாரியத்துக்கு ஒதுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக ராமர் கோயில் கட்டுமானத்துக்கான பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில் கடந்த 9-ம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.

இந்நிலையில் எல்லையில் கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவத்தினரிடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் இரு நாட்டு எல்லைகளிலும் பதற்றமான சூழல் நீடித்துள்ளது.

இந்த சூழலால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்குவதை ராமர் கோயில் கட்டும் ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிறுத்தி வைத்துள்ளது.

இதுகுறித்து ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் உறுப்பினர் அனில் மஸ்ரா நிருபர்களிடம் கூறுகையில், “எல்லையில் இந்திய- சீன ராணுவத்தினர் மோதலால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. நாட்டைப் பாதுகாப்பதுதான் முக்கியம். ஆதலால், ராமர் கோயில் கட்டும் பணிகள் தொடங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

கோயில் கட்டுமானப் பணி என்பது நாட்டில் நிலவும் சூழலுக்கு ஏற்ப அடுத்துவரும் நாட்களில் முடிவு செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். எல்லையில் வீரமரணம் அடைந்த 20 வீரர்களுக்களுக்கும் அறக்கட்டளை சார்பில் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே அயோத்தியில் சீனாவுக்கு எதிராக இந்தியா மகாசாபா, விஸ்வ இந்து பரிசத் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராகக் கோஷமிட்டும், அவரின் உருவ பொம்மையை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in