

கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதல் விவகாரத்தில் ‘நிராயுதபாணிகளாக வீரர்கள் சென்றது ஏன்?’ என்று ராகுல் காந்தி மத்திய அரசுக்குக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் ஒப்பந்தப்படி ஆயுதங்களுடன் செல்லக்கூடாது என்று பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் சம்பித் பாத்ரா கூற ஜெய்சங்கரோ இந்திய வீரர்களிடம் ஆயுதம் இருந்தது என்று கூறியிருந்தார்.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறும்போது, “உண்மைகளை நேராக பெறுவோம்! பொதுவாகவே எல்லை பாதுகாப்பு பணியில் இருக்கும்போது வீரர்கள் கையில் ஆயுதம் இருக்கும். அதுபோலவே லடாக் எல்லையில் கல்வான் பகுதியிலும் சீனாவுடனான மோதலின் போது இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்தன. 1996, 2005 ஒப்பந்தங்களின்படி மோதல் சமயங்களில் ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என்ற ஒப்பந்தம் இருப்பதால் ஆயுதங்களை பயன்படுத்த வில்லை’’ என விளக்கமளித்தார்.
இந்நிலையில் பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பாத்ரா கூறும்போது, “ராகுலைப் போல் பொறுப்பற்ற ஒரு அரசியல்வாதியை இந்தியா இதுவரை சந்தித்ததில்லை.
நிராயுதபாணிகளாக ராணுவ வீரர்கள் ஏன் செல்ல வேண்டும் என்று கேட்கிறார் ராகுல், மத்தியில் இவரது கட்சியின் ஆதரவில் மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சியின் தேவகவுடா பிரதமராக இருந்த போது இருநாட்டு ராணுவத்தினரும் எல்லையிலிருந்து 2 கிமீ தூரத்துக்கு ஆயுதங்களை எடுத்துச் செல்ல கூடாது என்று ஒப்பந்தம் கையெழுத்தானது. பிறகு மன்மோகன் ஆட்சியிலும் 2005 ஆம் ஆண்டு இதே போல் மீண்டும் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.
எதுவுமே தெரியாமல் ராகுல் காந்தி பேசுவது வழக்கமாகி வருகிறது, தேசபக்தி சிறிதும் இன்றி நாட்டையும் ராணுவத்தையும் அவர் அவமதித்துப் பேசி வருகிறார்” என்றார் சம்பித் பாத்ரா.