Published : 19 Jun 2020 09:13 am

Updated : 19 Jun 2020 09:13 am

 

Published : 19 Jun 2020 09:13 AM
Last Updated : 19 Jun 2020 09:13 AM

டெக்சாமெதாசோன் என்றால் என்ன? கரோனா நோயாளிகள் உயிரைக் காக்கிறதா? இந்தியச் சூழலுக்கு பொருந்துமா? என்ன சொல்கிறது ஐசிஎம்ஆர்? விரிவான அலசல்

covid-19-what-is-dexamethasone
பிரதிநிதித்துவப்படம்


கரோனா வைரஸ்… குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உலகம் முழுவதையும் இன்று அச்சறுத்தும் ஒரே வார்த்தை.இந்த கட்டுரையைப் படித்துக்கொண்டிருக்கும் நொடிப்பொழுதுவரை கரோனா வைரஸ் பெருந்தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் மருந்தோ, தடுப்பு மருந்தோ அல்லது அழிக்கும் மருந்தோ கண்டுபிடிக்கப்படவில்லை.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸுக்கு இதுவரை உலகளவில் 85 லட்சம் மக்கள் பாதி்க்கப்பட்டுள்ளனர், 4.50 லட்சம் உயிர்கள் காவு வாங்கப்பட்டுள்ளன.


கரோனா வைரஸுக்கு எதிரான போரில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல வல்லரசு நாடுகளும், நூற்றுக்கணக்கான தனியார் நிறுவனங்களும் தங்களின் முயற்சியை முடுக்கிவிட்டுள்ளார்கள்.

ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு படிநிலையில் தங்களது பரிசோதனையை, ஆய்வைக் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் கரோனா அரக்கனை எதிர்கொள்ள வீரியமுள்ள மருந்தைக் கண்டுபிடித்து மக்களிடம் கொண்டுசேர்ப்பது எளிதில் சாத்தியமில்லை என்பது விஞ்ஞானிகள் மட்டுமே அறிந்தது.

ஏனென்றால் ஒவ்வொரு நாட்டின் காலச்சூழலுக்கு ஏற்ப கரோனா வைரஸ் தன்னை உருமாற்றிக்கொண்டே வருகிறது என்பது மருத்துவ வல்லுநர்களும், விஞ்ஞானிகளும் செய்துவரும் ஆய்வுகளில் இருந்து அவ்வப்போது தெரியவருகிறது

தடுப்பு மருந்து சாத்தியமா

பொதுவாக தடுப்பூசிகளில் இரு வகைகள் உண்டு. அவை உயிர் உள்ள நுண்ணுயிரிகளை கொண்டு தயாரிக்கப்படுபவை(Live attenuated Vaccines) கொல்லப்பட்ட நுண்ணுயிரிகள் மூலம் தயாரிக்கப்படுபவை(Killed Vaccines).

உயிருள்ள தடுப்பூசி என்பது ஒரு நோயினை ஏற்படுத்தும் நுண்ணுயிரிக்கு எதிராக அந்த நுண்னுயிரியின் நோய் உண்டாக்கக்கூடிய தன்மையினை(Pathogenecity) நீக்கிவிட்டு அதேசமயம் மனிதனுக்கு எதிர்ப்பு சக்தியினை தூண்டக்கூடிய தன்மையை(Immunogenecity) நிலை பெறச் செய்து அந்த நுண்ணுயிரியை தயார் செய்வதாகும்.

உயிரற்ற தடுப்பூசி(Killed Vaccines) என்பது நோய் உண்டாக்கக்கூடிய நுண்ணுயிரியை வெப்பத்தின் மூலமாகவோ அல்லது வேதிப்பொருள் மூலமாகவோ கொன்று முன்னதைப் போலவே அதனுடைய நோய் உண்டுபண்ணும் திறனை நீக்கிவிட்டு, நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் திறனை நிலைபெறச் செய்து தயாரிக்கப்படுபவையாகும்.

வீரியத்தின் அடிப்படையில்பார்த்தால் உயிருள்ள தடுப்பூசியோடு, உயிரற்ற தடுப்பூசியை ஒப்பிட்டால் சற்று குறைவுதான்.

பாக்டீரியா மற்றும் டி.என்.ஏ வை மரபுப்பொருளாக கொண்ட வைரஸ்கள்(DNA viruses), ஆர்.என்.ஏ (RNA Viruses)வைரஸ்களை தடுப்புமருந்தாக மாற்றப்பட்டு பயன்பாட்டிலும் உள்ளது. ஆனால் பெரும்பான்மையான ஆர்.என்.ஏ வைரஸ்களை தடுப்பு மருந்தாக பயன்படுத்துவது கடும் சவாலாகவே இன்றளவும் உள்ளது.

உதாரணமாக எய்ட்ஸ் நோயினை உண்டாக்கும் ஹெச்.ஐ.வி வைரஸ்(HIV virus), சாதாரன சளிக்கு காரணமான ரைனோ (Rhino viruses),நுரையீரல் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் கரோனா வைரஸ் (carona virus) .இவைகளுக்கிடையேயான தனிச்சிறப்பு என்னெவன்றால் ஆன்டிஜெனிக் மார்க்கர் (Antigenic marker) அதாவது, வைரஸ்களில் நோய் உண்டாக்கும் பகுதி நிலையான தன்மை கொண்டதல்ல அதை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்கும்.

நோய் உண்டாக்கும் பகுதி நிலை அடிக்கடி மாற்றுவதால் என்ன ஆகும் என்றால் இன்று உருவாகும் தடுப்பு மருந்தானது நாளை செயலற்றதாகிவாடும்.காரணம் நாளை அது தனது நோய் உண்டாக்கும் பகுதிநிலையை வேறொன்றாக மாற்றியிருக்கும்.

இதன் காரணமாகவே இன்றும் சார்ஸ்(SARS),எய்ட்ஸ்(AIDS), கரோனாவைரஸ் போன்ற வைரஸ்களுக்கு தடுப்பு மருந்தானது கண்டுபிடிக்கப்படாமல் இருக்கிறது .இதே ஆர்.என்.ஏ வைரஸ் வகையைச் சேர்ந்ததுதான் கரோனா வைரஸும், தனது தனது நோய் உண்டாக்கும் பகுதியை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்கும்.

ஆதலால் கரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல என்பது புரிந்திருக்கும்.

இப்படிப்பட்ட சூழலில் கரோனா நோயாளிகளின் உயிரைக் காக்கும் வகையில் ஒரு மருந்து இருப்பதாக லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மருத்துவர்கள் தங்கள் ஆய்வின் மூலம் தெரிவித்திருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியாகத்தானே இருக்கும்.

ஆம், மருத்துவ உலகமே டெக்ஸாமெதாசோன் எனும் வார்த்தையைத்தான் இப்போது உச்சரித்து, அதை புகழ்ந்து வருகிறார்கள்.

டெக்ஸாமெதாசோன் என்றால் என்ன?

லண்டன் ஆக்ஸ்போர்ட் மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரைக்கும் டெக்ஸாமெதாசோன் மருந்து ஒன்றும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டது அல்ல. கடந்த 1957-ம் ஆண்டு பிலிப் ஷோவால்டர் ஹென்ச் என்ற விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்டு 1961-ம் ஆண்டு முதல் மருத்துவ உலகில் மருத்துவர்களால் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

டெக்ஸாமெதாசோன் எனும் மருந்து ஸ்டீராய்ட் வகை மருந்தாகும்.

உலகளவில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் உற்பத்தியில் இந்திய நிறுவனங்கள் எந்த அளவுக்கு பெரும்பங்கு வகிக்கிறதோ அதேபோலத்தான் டெக்சாமெத்தாசோன் மருந்துகள் உற்பத்தியிலும் இந்திய நிறுவனங்கள் முன்னணியில் இருக்கின்றன. ஏறக்குறைய 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த டெக்சாமெத்தோசோன் மருந்தை உற்பத்தி செய்து வருகின்றனர்.

ரெம்டெசிவிர் மருந்துபோன்று இது ஒன்றும் விலை அதிகம் இல்லை, 10 மாத்திரைகள் கொண்ட அட்டையே 3 ரூபாய்க்குள்ளாகாத்தான் இருக்கும். இவ்வளவு விலை மலிவான மருந்தா கரோனா நோயாளிகளின் உயிரைக் காக்கிறது என்று கேட்டால் இன்னும் ஆய்வில் முழுமையாக வெளிவரவில்லை என்பதுதான் அதற்கு நிதர்சனம்.

டெக்ஸாமெதாசோன் மருந்து எந்த நோய்களுக்குப் பயன்படுகிறது

முன்னரே கூறியதுபோல் டெக்ஸாமெதாசோன் என்பது ஒரு வகை ஸ்டீராய்டு மருந்தாகும். பல்வேறு விதமான வாத நோய்கள், தோல் நோய்கள், ஒவ்வாமை(அலர்ஜி), ஆஸ்துமா, நீண்டகால சுவாச நோய்கள், சுவாசக் குழாயில் ஏற்படும் ஒருவகை அலர்ஜியை போக்குதல், மூளை வீக்கம், கண் சிகிச்சை, கண் வீக்கம், கண் அறுவை சிகிச்சை ஆகியவற்றுக்கும் பயன்படுத்தலாம்.

காசநோய்க்கு நோய் எதிர்ப்புச் சக்தி மருந்துடன் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. பெண்களுக்கு பிரசவ நேரத்தில் அதாவது குறைமாத பிரசவ நேரத்தில் குழந்தையை வெளியே எடுக்க மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்தை வாய்வழியாகவோ அல்லது ஐவி எனப்படும் நரம்புகள் மூலமோ நோயாளியின் தன்மைக்கு ஏற்றார்போல் மருத்துவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

லண்டன் மருத்துவர்கள் சொல்வது என்ன

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுவது என்னவென்றால், “டெக்ஸாமெதாசோன் என்ற மருந்து கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நபர்களையும் குணப்படுத்துகிறது. வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ள நோயாளிகளின் உயிரிழக்கும் வாய்ப்பை மூன்றில் ஒரு பங்கு இது குறைக்கிறது.

ஆக்ஸிஜன் செலுத்தப்படும் நிலையில் உள்ள நோயாளிகள் உயிரிழக்கும் வாய்ப்பை ஐந்தில் ஒரு பங்கு குறைக்கிறது. பிரிட்டனில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கிய காலத்தில் இருந்தே இந்த மருந்தைப் பயன்படுத்தியிருந்தால் 5 ஆயிரம் உயிர்களைப் பாதுகாத்திருக்க முடியும்.

கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு இந்த மருந்து மிகவும் உதவும். இதுவரை கோவிட் நோயாளிகளின் இறப்பு விகிதத்தைக் குறைப்பதாக கண்டறியப்பட்ட மருந்து இது ஒன்றே. இது பெரிய அளவில் இறப்பைக் குறைக்கிறது. என்று வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.

ஆனால் இங்கு ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டியுள்ளது. இதற்கு முன், மலேரியா காய்ச்சலுக்கு வழங்கக்கூடிய ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரை கரோனா நோயாளிகள் உயிரைக் காக்கும் என்று அவசர கதியில் அதிபர் ட்ரம்ப் அறிவிக்க ஏராளமான நாடுகளும் அதை கரோனா நோயாளிக்களுக்கு பரிந்துரைத்தன.

ஆனால் முழுமையான ஆய்வு நடந்து முடியும் முன்பே இந்த ஆலோசனை முன்வைக்கப்பட்டு நோயாளிகளுக்கு பரிசோதிக்கப்பட்டது. ஆனால், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை கரோனா நோயாளிகளுக்கு வழங்கும் போது அவர்களுக்கு மாரடைப்பு நோய் ஏற்பட்டு உயிரிழப்பு இன்னும் தீவிரமாகும் ஆபத்தான சூழல் இருப்பதாக அமெரிக்க மருத்துவர்கள் எச்சரித்தபின் அதன் பயன்பாடு அமெரிக்காவில் குறைந்துள்ளது.

இந்தியாவில் கூட ஹைட்ராக்ஸ்குளோரோகுயின் மாத்திரைகளை பலரும் வாங்கி இருப்பு வைக்கத் தொடங்கினார். அவ்வாறு வாங்கி இருப்பு வைக்காதீர்கள், உண்மையில் அந்த மருந்து யாருக்கு கிடைக்கவேண்டுமோ அவர்களுக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு பற்றாக்குறை ஏற்படும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதும் நினைவுகூரத்தக்கது.

அதேபோன்ற நிலைமைதான் இப்போது டெக்ஸாமெதாசோன் மருந்துக்கும் ஏற்படலாம். ஏனென்றால், லண்டன் மருத்துவர்கள் ஒரு குழு, ஒரு குறிப்பிட்ட நோயாளிகளுக்கு டெக்ஸாமெதாசோன் மருந்தை செலுத்திப் பார்த்ததில் அவர்களுக்கு பயன் அளித்துள்ளது. இறப்பு விகிதத்தை 41 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாகக் குறைந்துள்ளது.

லண்டன் மருத்துவர்கள் கூற்றில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஆக்ஸிஜன் தேவையில் இருக்கும் கரோனா நோயாளிகள், வென்டிலேட்டர் உதவியில் இருக்கும் ஆபத்தான கரோனா நோயாளிகளின் உயிரைக் காக்க டெக்ஸாமெதாசோன் பயன்பட்டுள்ளது. ஆனால், நோயாளிகளின் தன்மை, அவர்களின் உடல்நிலை, அவர்களுக்கு நீண்டகால நோய்கள்(கோமார்பிடிடிஸ்) இருக்கிறதா என்ற எந்த விவரமும் இதுவரை வெளியிடவில்லை.

ஆகவே, டெக்ஸாமெதாசோன் மருந்தை நாம் கண்ணை மூடிக்கொண்டு புகழ்வதும், அதை பயன்படுத்த பரிந்துரைப்பதும் ஆபத்தானதுதான். ஏனெனில் ஸ்டீராய்ட் மருந்துகளுக்கேயுரிய பக்க விளைவுகள் எப்போதும் உண்டு.

இந்த டெக்ஸாமெதாசோன் இந்திய சூழலுக்கு ஏற்றார்போல், இந்திய கரோனா நோயாளிகளுக்கு அப்படியே பரிந்துரைக்கவோ அல்லது கரோனா நோயாளிகள் உயிரைக்காக்கும் ஆபத்பாந்தவன் என்றோ வர்ணிக்க முடியாது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலும் டெக்ஸாமெதாசோன் மருந்தை இந்தியச் சூழலுக்கும், இந்திய கரோனா நோயாளிகளுக்கும் பரிந்துரைக்கும் போது மிகுந்த எச்சரிக்கையுடன், போதுமான ஆய்வுகள் இன்றி பரி்ந்துரைப்பது உகந்தது அல்ல என்று எச்சரி்க்கை செய்துள்ளது.

ஐசிஎம்ஆர் அமைப்பின் மூத்த மருத்துவ வல்லுநர் ஒருவர் கூறுகையில் “டெக்ஸாமெதாசோன் மருந்து என்பது ஸ்டீராய்டு வகை மருந்தாகும். லண்டன் மருத்துவர்கள் குழுவினர் பரிந்துரைப்பதை அப்படியே இந்திய சூழலுக்கு பொருத்திப்பார்க்க முடியாது.

டெக்ஸாமெதாசோன் மருந்தை இன்னும் கோமார்பிடிட்டிஸ் எனச் சொல்லப்படும் நீண்டகால நோய்கள் இருக்கும் ரத்தக்கொதிப்பு, நீரிழிவு நோய், நுரையீரல் சுவாசக் கோளாறு, குழந்தைகள் ஆகியோருக்கு செலுத்திப் பார்க்கவில்லை. அவ்வாறு செலுத்துவதும் சவாலானதுதான்.

முழுமையான ஆய்வுகள் தெரியாமல் அதைப் பற்றி நாம் கூறவதும் கடினம். குறிப்பாக லண்டன் மருத்துவர்கள் எந்தெந்த நோயாளிகளுக்கு இதைப் பயன்படுத்தினார்கள், அந்த நோயாளின் உடல்கூறு என்ன என்ற என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

கோமார்பிடிட்டிஸ் நோயாளிகள் அதாவது தைராய்டு, அல்சர், மனஅழுத்தம், நீரிழவு, ரத்தஅழுத்தம், நுரையீரல் நோய், தசைக்கோளாறு போன்ற நோய்கள் இருக்கும் கரோனா நோயாளிகள் எத்தனை பேர் உயிரை டெக்சாமெத்தோசோன் மருந்து காக்கும் என்றெல்லாம் இப்போது கூற முடியாது.

இந்தியாவில் கரோனாவில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலும் கோ-மார்பிடிட்டிஸ் எனச் சொல்லப்படும் நீண்டகால நோய்கள் இருப்பவர்களே இறந்துள்ளார்கள். ஆதலால், டெக்ஸாமெதாசோன் மருந்தை உடனடியாக பரிந்துரைப்பதில் மிகுந்த எச்சரிக்கை தேவை” எனத் தெரிவித்தார்

சிஎஸ்ஐஆர் இயக்குநர் மருத்துவர் சேகர் மாண்டே கூறுகையில் “டெக்ஸாமெதாசோன் மருந்து மிகவும் பழமையான ஸ்டீராய்டு மருந்து. லண்டன் மருத்துவர்கள் குழுவினர் சொல்வதுபோல் கடைசிக்கட்டத்தில் இருக்கும் கரோனா நோயாளிகள் உயிரைக்காக்கும் என்பது இந்தியச் சூழலுக்கு பொருந்துமா என்பது தெரியாது. அந்த ஆய்வின் முழுமையான தகவல் வந்தபின்புதான் அதை பயன்படுத்துவது குறித்து பரிந்துரைக்கலாம். பல மருத்துவர்கள் உலகளவில் இதை கரோனா நோயாளிகளுக்கு இதை முன்பு பரிந்துரைத்துள்ளதாகக் கூறப்படுகிறது

இந்த டெக்ஸாமெதாசோன் மருந்து மிகவும் மலிவான மருந்து என்பதால், கரோனா நோயாளிகள் சுயமாக எடுத்துக்கொள்வது மிகவும் ஆபத்தானது. கண்டிப்பாக அவ்வாறு செய்வது கூடாது, மருத்துவர்களின் ஆலோசனையின்படி, நோயாளிகளின் உடல்நிலை அறிந்தபின் அவர்கள் பரி்ந்துரைத்தால் மட்டுமே எடுக்கலாம். இல்லாவிட்டால் சிலநேரத்தில் உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும்” எனத் தெரிவித்தார்

உலக சுகாதார அமைப்பும் கூட இதே கருத்தைத்தான் முன்மொழிந்துள்ளது. அந்த அமைப்பின் தலைமை மருத்துவர் மைக்கேல் ரேயான் கூறுகையில் “டெக்ஸாமெதாசோன் மருந்து கரோனா நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கிறது என்ற செய்தி மகிழ்ச்சியளித்தாலும் அது குறித்த முழுமையான ஆய்வுகள் தேவைப்படுகிறது.

இப்போது கிடைத்திருப்பது முதன்மை விவரங்கள்தான், கரோனா நோயாளிகள் ழுழுமைக்கும் எந்த அளவுக்கு டெக்சாமெத்தோசோன் மருந்து தீவிரமான பயனை அளிக்கிறது என்பதற்கு நீண்ட ஆய்வு அவசியம். உலக சுகாதார அமைப்பின் மருத்துவ வல்லுநர்கள் குழுமுழுமையாக இதை ஆய்வு செய்து ஆலோசித்து, உலகநாடுகளுக்கு பரிந்துரைக்கும்” எனத் தெரிவித்தார்

டெக்சாமெத்தோசோன் மருந்தை உட்கொண்டால் வரும் பாதிப்பு?

டெக்ஸாமெதாசோன் ஸ்டீராய்ட் மருந்தை மருத்துவர்கள் ஆலோசனைப்படி இல்லாமல் சுயமாக எடுத்துக்கொண்டால் சிலரின் உடலுக்கு பெரும் தீங்கு ஏற்படும், உயிரிழப்பும் கூட ஏற்படும். உடல் பருமன், இன்சோம்னியா, மனஅழுத்தம், திடீர் ரத்த அழுத்தம் உயர்வு, தொற்றுநோய் அதிகரிப்பு, வாந்தி, குழப்பமான மனநிலை, தலைவலி உள்ளிட்ட பல உபாதைகள் நேரலாம்.

ஆதலால் டெக்ஸாமெதாசோன் மருந்து கரோனா நோயாளிகளின் உயிரைக் காக்கும் மருந்து என்று முழுமையாகக் கூறிவிடுதல் முடியாது. அதிலும் இந்தியாவில் உள்ள கரோனா நோயாளிகளுக்கு எந்த அளவுக்கு பயன் அளிக்கும் என்பதற்கு முழுமையான தரவுகள் இல்லை.

வறண்டிருக்கும் நிலத்தில் மழைத்துளி விழுந்ததுபோல், கரோனா பீதியில் இருக்கும் மக்களுக்கு டெக்ஸாமெதாசோன் மருந்தின் செய்தி ஆறுதலாக இருக்குமே தவிர தீர்வாக இருக்காது. இன்னும் ஆழமான ஆய்வுகளுக்குபின்புதான் மருத்துவர்கள் பரிந்துரைப்பதற்கு சாத்தியம் உண்டு

தவறவிடாதீர்!


DexamethasoneDoes It Work?COVID-19University of Oxford.Cut mortality in patientsSevere forms of COVID-19டெக்சாமெதாசோன்கரோனா நோயாளிகள்கரோனா உயிரிழப்பு தடுக்கிறதுலண்டன் மருத்துவர்கள்ஐசிஎம்ஆர்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author