

மக்களின் நம்பிக்கைக்குரியவர்கள் மட்டுமே புதிதாக அமையவுள்ள பாரதிய ஜனதா கட்சி அரசில் அமைச்சர்களாகப் பொறுப்பேற்க வேண்டும் என்று பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி கூறியுள்ளார்.
நாட்டின் புகழ்பெற்ற வழக்கறிஞர்களில் ஒருவர் ராம் ஜெத்மலானி. முன்னாள் சட்ட அமைச்சர், மாநிலங்களவை எம்.பி., பா.ஜ.க. முன்னாள் உறுப்பினர் என்று பல முகங்கள் இவருக்கு உண்டு.
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான் மையுடன் ஆட்சி அமைக்கவிருக்கும் நேரத்தில், ‘சந்தேகத்தின் நிழல் படியாத, எந்த ஒரு குற்றத்துக்கும் ஆளாகாதவர்கள் மட்டுமே மோடி அரசில் அமைச்சர்களாக வேண்டும்’ என்று கருத்து தெரிவித்திருப்பதன் மூலம் திடீரென்று ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் ஜெத்மலானி. அவரது இந்த கருத்து பற்றியும், காங்கிரஸ் அரசின் தோல்வி, இலங்கைப் பிரச்சினை உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:
நீங்கள் திடீரென்று இப்படி ஒரு கருத்து தெரிவிக்க என்ன காரணம்?
நரேந்திர மோடி இந்நாட்டின் பிரதமர் ஆவதன் அடிப்படையே, ஊழலுக்கு எதிரான அரசாக தன் அரசு இருக்கும் என்று அளித்த வாக்குறுதிதான். கிரிமினல் குற்றம் சாட்டப்பெற்ற எந்த ஒருவரும் அமைச்சராகக் கூடாது. மக்களின் நம்பிக்கைக்குரியவர்கள் மட்டுமே அமைச்சர்களாக வேண்டும். அப்போதுதான் ஊழலற்ற அரசை மோடி வழங்க முடியும். இதை எதிர்பார்த்துதான் மக்கள் அவருக்கு வாக்களித்துள்ளனர். அதை நிறைவேற்றுவது பா.ஜ.க.வின் கடமை.
அப்படியென்றால், பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகளில் இருந்து பெரும்பாலானவர்கள் அமைச்சராகப் பொறுப்பேற்க முடியாதே. கூட்டணிக் கட்சிகளை பா.ஜ.க. திருப்திப்படுத்த முடியாமல் போகக்கூடிய சூழ்நிலை ஏற்படலாம் அல்லவா?
எந்த ஒரு காரணத்தைக் கொண்டும், பா.ஜ.க. ‘ஊழலற்ற அரசு’ என்று தான் எடுத்திருக்கும் நிலைப்பாட்டிலிருந்து நழுவக் கூடாது. சந்தேகத்தின் நிழல் படியாதவர்கள்தான் புதிதாக அமையவிருக்கும் அமைச்சரவையில் இருக்க வேண்டும். கூட்டணிக் கட்சிகளில் இருந்து அமைச்சரவைக்குத் தேர்ந்தெடுக்கப் படுபவர்களும்கூட குற்றமற்றவர்களாகவே இருக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு என்ன காரணம்? கபில் சிபல் போன்றவர்களே தோல்வியைத் தழுவியுள்ளனரே?
காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததற்குக் காரணம் அக்கட்சியினர் செய்த ஊழல்தான். அவர்களது ஆட்சியின்போது, நிதிமோசடி செய்தவர்களின் பட்டியலை இந்திய அரசிடம் ஜெர்மனி அரசு கொடுத்தது. அந்த பட்டியல் உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும்கூட வெளியிடப்படவே இல்லை. அப்படியென்றால், அந்த பட்டியலில் அவர்களைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்பதுதானே அர்த்தம். இது பிரதமர் முதற்கொண்டு அக்கட்சியைச் சேர்ந்த அனைவருக்கும் அவமானம்.
இலங்கைப் பிரச்சினையில் பா.ஜ.க. அரசு எத்தகைய முடிவுகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
நம் அரசியலமைப்புச் சட்டத்தின் 51-வது பிரிவு, அண்டை நாடுகள் மற்றும் வெளிநாடு களுடனான கொள்கையைப் பற்றிச் சொல்கிறது. அதன்படி, சீனாவுடன் நமக்கு எல்லைப் பிரச்சினை இருந்தால், நாம் சர்வதேச நீதிமன்றத்துக்குச் செல்லலாம். அதேபோல, இலங்கையுடன் பிரச்சினை இருக்கும்பட்சத்திலும், நாம் சர்வதேச நீதிமன்றத்தை அணுகலாம். தனிப் பெரும்பான் மையுடன் புதிய அரசு ஆட்சி அமைப்பதால், வெளிநாட்டுப் பிரச்சினைகளில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்பலாம்.
பா.ஜ.க. அரசில் இலங்கைப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்குமா?
இலங்கைப் பிரச்சினை குறித்து பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பாக எதுவும் சொல்லப்படவில்லை. ஆனால் இலங்கைத் தமிழர்களுக்கும் நமக்கும் நீண்ட காலமாக உறவு இருந்து வருகிறது. அதன் அடிப்படையில் இப்பிரச்சினையில் சுமுகத் தீர்வு காண பா.ஜ.க. நடவடிக்கை எடுக்கும்.
ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் பிரச்சினையை பா.ஜ.க. எப்படி அணுகும்?
காங்கிரஸ் தலைமையிலான அரசு இந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வரவில்லை. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இவ்வாறு ராம் ஜெத்மலானி கூறினார்.