லடாக் மோதல்; இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்தன- ஆனால் பயன் படுத்தவில்லை: ராகுல் காந்திக்கு ஜெய்சங்கர் பதில்

லடாக் மோதல்; இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்தன- ஆனால் பயன் படுத்தவில்லை: ராகுல் காந்திக்கு ஜெய்சங்கர் பதில்
Updated on
2 min read

சீனாவுடனான மோதலின் போது இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்தன, ஆனால் பயன்படுத்தவில்லை என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ராகுல் காந்தியின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

சீனாவை ஒட்டியுள்ள லடாக் எல்லையில் இந்தியப் பகுதிக்குள் சாலை அமைக்கும் பணி கடந்த மே மாதத் தொடக்கத்தில் நடை பெற்றது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா, அந்தப் பகுதி தங்களுக்குச் சொந்தமானது என்றும், அங்கிருந்து இந்திய ராணுவப் படை வெளியேற வேண்டும் எனவும் கூறியது.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதிக்குள் சீன ராணுவப் படையினர் அத்துமீறி நுழைய முயன்றனர். இதனை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்தபோது இரு தரப்புக்கும் இடையே லேசான மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, இரு நாடுகளும் தங்கள் ராணுவ வீரர்களை அங்கு குவித்ததால் இந்திய – சீன எல்லைப் பகுதியில் பதற்றம் உருவாகியது.

இதனிடையே, இரு தரப்பைச் சேர்ந்த ராணுவ உயரதிகாரிகள் தலைமையில் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, அந்தப் பகுதியில் இருந்து ராணுவ வீரர்களை விலக்கிக் கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, கடந்த திங்கள்கிழமை மாலை சீன ராணுவப் படைகள் அங்கிருந்து வெளியேறும்போது, இந்திய ராணுவத்தினரை இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் அவர்கள் திடீரென தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதற்கு இந்தியா சார்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. இந்த பயங்கர மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். சீனா தரப்பில் 43 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகின. சீனாவின் இந்த அட்டூழியத்திற்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறுகையில் ‘‘இந்திய ராணுவ வீரர்கள் பலியானதற்கு யார் பொறுப்பு? வீரர்களை ஆயுதமின்றி அனுப்பி பலியாக காரணம் யார்?’’ எனக் கேள்வி எழுப்பினார்.

ராகுலின் கேள்விகளுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘உண்மைகளை நேராக பெறுவோம்! பொதுவாகவே எல்லை பாதுகாப்பு பணியில் இருக்கும்போது வீரர்கள் கையில் ஆயுதம் இருக்கும். அதுபோலவே லடாக் எல்லையில் கல்வான் பகுதியிலும் சீனாவுடனான மோதலின் போது இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்தன. 1996, 2005 ஒப்பந்தங்களின்படி மோதல் சமயங்களில் ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என்ற ஒப்பந்தம் இருப்பதால் ஆயுதங்களை பயன்படுத்த வில்லை’’ என விளக்கமளித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in