Last Updated : 18 Jun, 2020 01:55 PM

 

Published : 18 Jun 2020 01:55 PM
Last Updated : 18 Jun 2020 01:55 PM

மணிப்பூரில் பாஜக ஆட்சி கவிழ்கிறதா? 9 எம்எல்ஏக்களின் ஆதரவு வாபஸ்; நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருகிறது காங்கிரஸ்

மணிப்பூரில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி அமைத்த பாஜகவுக்கு ஆதரவு அளித்த எம்எல்ஏக்களில் 9 பேர் திடீரென ஆதரவை வாபஸ் பெற்றுள்ளதையடுத்து அங்கு பாஜக கூட்டணி ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும் முயற்சியில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான ஓ இபோபி சிங் இறங்கியுள்ளார்.

பாஜக கூட்டணியில் இருந்த தேசிய மக்கள் கட்சி (என்பிபி) எம்எல்ஏக்கள் 4 பேர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். பாஜக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா செய்தனர். மற்றும் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏவும், சுயேச்சை எம்எல்ஏ ஒருவரும் ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். ஒரே நேரத்தில் 9 பேர் ஆதரவை வாபஸ் பெற்றதால் ஆளும் பாஜக அரசுக்குப் பெரும் சிக்கலாக மாறியுள்ளது.

மேலும், நாளை மாநிலங்களவைத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் பாஜகவின் 3 எம்எல்ஏக்களே ராஜினாமா செய்திருப்பது அங்கு அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூர் முன்னாள் முதல்வர் இபோபி சிங்

மாநிலங்களவைத் தேர்தல் இதற்கு முன் நடந்தபோது கர்நாடகா, குஜராத், மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆப்ரேஷன் கமலாவை செயல்படுத்தியது. ஆனால், மணிப்பூரில் இப்போது அது பூமாராங்காகத் திரும்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மணிப்பூர் சட்டப்பேரவை 60 எம்எல்ஏக்களைக் கொண்டது. தற்போது அங்கு 59 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவான ஷியாம்குமார் சிங் 2017-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றவுடன் பாஜகவுடன் சேர்ந்ததால் அவர் தகுதி நீக்கப்பட்டார்.

தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸுக்கு 28 இடங்களும், பாஜகவுக்கு 21 இடங்களும் கிடைத்தன. இதில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க முற்பட்டு, தேசிய மக்கள் கட்சிக்கு (என்பிபி) 4 எம்எல்ஏக்களும், நாகா மக்கள் முன்னணி (என்பிஎப்) கட்சிக்கு 4 எம்எல்ஏக்களும் கிடைத்தனர். லோக் ஜன சக்தி கட்சி, திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சியைச் சேர்ந்த தலா ஒரு எம்எல்ஏ, சுயேச்சை எம்எல்ஏ ஆகியோரின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், மேற்கு வங்கத்தில் எதிரும் புதிருமாக இருக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, பாஜகவும், மணிப்பூரில் கூட்டணி ஆட்சியில் இருந்தன என்பதுதான் சுவாரஸ்யமாகும். இதற்கிடையே காங்கிரஸிலிருந்து 7 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்த எம்எல்ஏக்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கில் இன்னும் தீர்ப்பு வராமல் நிலுவையில் இருக்கிறது. இந்த 7 எம்எல்ஏக்களும் காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார்கள்.

நீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைக்கும் வரை இந்த 7 எம்எல்ஏக்களும் எந்தவிதமான தீர்மானத்திலும் வாக்களிக்கக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஒரு வாரத்துக்குச் சட்டப்பேரவைக்குள் செல்லவும் இந்த 7 எம்எல்ஏக்களுக்கு கடந்த வாரம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில் தேசிய மக்கள் கட்சியின் (என்பிபி) 4 எம்எல்ஏக்கள், திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ, சுயேச்சை எம்எல்ஏ ஆகிய 6 பேர் பாஜக கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திடீரென நேற்று வாபஸ் பெற்றனர்.

மேலும், வியப்பளிக்கும் விஷயம் என்னவென்றால் பாஜகவின் சொந்த எம்எல்ஏக்கள் 3 பேர் நேற்று திடீரென ராஜினாமா செய்து அவர்கள் காங்கிரஸ் பக்கம் இணையப்போவதாக அறிவித்தனர்.

இதனால் திடீரென 9 எம்எல்ஏக்கள் ஆதரவை முதல்வர் பைரேன் சிங் ஆட்சி இழந்துவிட்டால், பெரும்பான்மையை இழந்து ஆட்சி ஊசலாட்டத்தில் இருக்கிறது.

தேசிய மக்கள் கட்சியின்(என்பிபி) 4 எம்எல்ஏக்களும் அமைச்சர்களாக இருந்தவர்கள். துணை முதல்வர் ஜோய்குமார் சிங், பழங்குடி மற்றும் மலைவாழ் மேம்பாட்டு அமைச்சர் என். காயிஷி, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் லெட்பா ஹவோகிப், சுகாதாரத்துறை அமைச்சர் ஜெயந்த் குமார் சிங் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்

இதில் துணை முதல்வராக ஜோய்குமார் சிங், முன்னாள் போலீஸ் டிஜிபி ஆவார். கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அப்போதைய முதல்வர் ஓ இபோபி சிங்குக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். இப்போது பாஜக அமைச்சரவையில் துணை முதல்வராக இருந்தும் ராஜினாமா செய்துள்ளார்.

மேலும், பாஜகவைச் சேர்ந்த சுபாஷ்சந்திரா சிங், ஹவோகிப், சாமுவேல் ஜென்டாய் ஆகியோரும், திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ரோபிந்தரோ சிங், சுயேச்சை எம்எல்ஏ ஷகாபுதீன் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.

இதனால் பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்த பாஜக கூட்டணி தற்போது ஆட்சி இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது காங்கிரஸ் வசம் 20 எம்எல்ஏக்களும், பாஜக வசம் 18 எம்எல்ஏக்களும் உள்ளனர். காங்கிரஸில் இருந்து பாஜகவுக்குச் சென்ற 7 எம்எல்ஏக்களும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் அதில் வாக்களிக்க முடியாது.

தேசிய மக்கள் கட்சியின் (என்பிபி) கட்சியின் 4 எம்எல்ஏக்கள், திரிணமுல், சுயேச்சை என 6 பேர் ஆதரவைப் வாபஸ் பெற்றுள்ளதால், பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத சூழல் நிலவுகிறது. தற்போது 52 இடங்கள் மட்டுமே பேரவையில் இருக்கும்போது அங்கு பெரும்பான்மைக்கு 27 எம்எல்ஏக்கள் இருந்தால் போதுமானது.

காங்கிரஸ் கட்சிக்கு 20 எம்எல்ஏக்கள் இருப்பதால், தேசிய மக்கள் கட்சியின் (என்பிபி) கட்சியின் 4 எம்எல்ஏக்கள், திரிணமூல், சுயேச்சை என 6 பேர் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்க காய் நகர்த்தத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான ஓ இபோபி சிங் கூறுகையில், “ராஜினாமா செய்த பாஜகவைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் விரைவில் காங்கிரஸில் இணைகின்றனர். என்பிபி கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்களும் பாஜக அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்று ஆலோசனை நடத்தி வருகின்றனர். அவர்களின் ஆதரவைப் பெற முயன்று வருகிறோம்.

விரைவில் சபாநாயகர் யும்நாம் கெம்சாந்த் சிங்கைச் சந்தித்து முதல்வர் பிரேன் சிங் அரசுக்கு எதிராக சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரக் கோரப்போகிறோம்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x