Last Updated : 18 Jun, 2020 11:52 AM

 

Published : 18 Jun 2020 11:52 AM
Last Updated : 18 Jun 2020 11:52 AM

இந்திய ராணுவ வீரர்கள் ஏன் நிராயுதபாணியாக உயிர்த்தியாகம் செய்ய அனுப்பப்பட்டார்கள்?- ராகுல் காந்தி கேள்வி

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய ராணுவத்தினர் ஏன் நிராயுதபாணியாக, உயிர்த்தியாகம் செய்ய அனுப்பப்பட்டார்கள்? இந்திய வீரர்களைக் கொல்ல சீனாவுக்கு எப்படி துணிச்சல் வந்தது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் திங்கள்கிழமை இரவு இந்திய, சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவத்தினர் வீரமரணம் அடைந்தனர். அதேபோல, சீன ராணுவம் தரப்பில் 35 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்பட்டாலும் அதுகுறித்து சீனா இதுவரை அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கவில்லை.

எல்லையில் நிலவும் சூழல், இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தும் அளவுக்கு சீனாவுக்கு எவ்வாறு துணிச்சல் வந்தது உள்ளிட்ட கேள்விகளை முன்வைத்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நேற்று ட்விட்டரில் மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் கேள்விகளை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவரின் பேட்டியை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து சில கேள்விகளை எழுப்பியுள்ளார். இந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர், இந்தியா-சீனா இடையே தற்போது பிரச்சினை ஏற்பட்ட லடாக் எல்லைப்பகுதியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில், “இந்திய ராணுவ வீரர்கள் லடாக் எல்லைக்குச் செல்லும்போது ஏன் நிராயுதபாணியாக உயிர்த்தியாகம் செய்ய அனுப்பப்பட்டார்கள். நிராயுதபாணியாகச் சென்ற இந்திய ராணுவ வீரர்களைக் கொல்வதற்கு சீன ராணுவத்துக்கு எவ்வாறு துணிச்சல் வந்தது” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தனது ட்வீட்டில், “ராணுவ வீரர்களின் தியாகம் ஆழமான வருத்தத்தை ஏற்படுத்துகிறது. வலி நிறைந்தது'' என்று ட்வீட் செய்திருந்தார்.

ஆனால், சீன ராணுவத்தின் மூர்க்கத்தனமான தாக்குதலைக் கண்டிக்கவும் இல்லை, இந்திய வீரர்களைக் கொன்ற சீனா என்ற வார்த்தையைப் பயன்படுத்தவும் இல்லை.

இதைக் குறிப்பிட்டு நேற்று ட்விட்டரில் ராகுல் காந்தி பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். அவர் பதிவிட்ட ட்வீட்டில், “ கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீனாவின் பெயரை தனது ட்வீட்டில் குறிப்பிடாதது ராணுவத்தினரை அவமதித்ததாகும்.

இந்திய வீரர்கள் கொல்லப்பட்டது உங்களுக்கு வலியாக இருந்தது என்றால், ஏன் உங்கள் ட்விட்டர் பதிவில் சீனாவின் பெயரைக் குறிப்பிடவில்லை. வீரர்களுக்கு இரங்கல் கூற 2 நாட்கள் ஏன் ஆனது, வீரர்கள் உயிர்த்தியாகம் செய்த நேரத்தில் ஏன் பேரணியில் பேசினீர்கள், ஏன் ஒளிந்துகொண்டு ஊடகங்கள் மூலம் ராணுவத்தைக் குற்றம் சாட்ட வைக்க வேண்டும்? விலைக்கு வாங்கிய ஊடகங்கள் மூலம் அரசை விமர்சிப்பதற்குப் பதிலாக ராணுவத்தின் மீது ஏன் பழிசுமத்தச் செய்ய வேண்டும்?” என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x