

பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனம் தனது 4ஜி தொழில்நுட்ப தரச்சேவை உயர்வுக்கு சீனாவின் தொலைத்தொடர்வு சாதனங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய தொலைத்தொடர்புத்துறை உத்தரவிடலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளதாக்குப் பகுதியில் நடந்த மோதலில் சீன ராணுவத்தினரால் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்த அதிரடி முடிவை தொலைத்தொடர்பு அமைச்சகம் எடுக்க உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட செய்தி அறிந்தவுடனே நேற்று டெல்லியில் முன்னாள் ராணுவ வீரர்கள் பலர் சீனத் தூதரகம் முன் போராட்டம் நடத்தியதால் பெரும் பதற்றம் நிலவியது. மேலும், வர்த்தக அமைப்பான சிஏஐடி உள்ளிட்ட பல்வேறு வர்த்தக அமைப்புகள் இனிமேல் சீனப் பொருட்களை விற்பனை செய்யமாட்டோம், புறக்கணிப்போம் என்று நேற்று அறிக்கை வெளியிட்டன.
இந்தச் சூழலில் பிஎஸ்என்எல் நிறுவனமும் தனது 4ஜி தொழில்நுட்பச் சேவைக்காக சீனத் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று தொலைத்தொடர்புத் துறை கேட்டுக்கொள்ளும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத குறித்து தொலைத்தொடர்பு அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், “பிஎஸ்என்எல் தனது 4ஜி தொழில்நுட்பச் சேவை தர உயர்வுக்கு சீனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம், சீனத் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகலாம். இதேபோல மாநகர் தொலைத்தொடர்பான எம்டிஎன்எல் நிறுவனத்துக்கும் அறிவுறுத்தப்படும்.
சீனாவிலிருந்து இறக்குமதியாகும் தொலைத்தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துவதைக் குறைக்கும்படி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்திடமும் கேட்பது குறித்துப் பரிசீலித்து வருகிறோம்” எனத் தெரிவிக்கின்றன.
எல்லையில் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றம், சீனப் பொருட்களை வாங்க வேண்டாம், புறக்கணிப்போம் என எழுந்த முழக்கங்கள், போராட்டங்கள், சமூக வலைதளங்களில் எழுந்த ஹேஷ்டேகுகள் போன்றவற்றைப் பார்த்து நேற்று சீனாவின் ஓப்போ செல்போன் நிறுவனம் தனது புதிய 5ஜி செல்போன் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியை திடீரென ரத்து செய்தது.
இந்திய செல்போன் சந்தையில் ஜியோமி, விவோ, ரியல்மி மற்றும் ஓப்போ ஆகிய 4 சீன நிறுவனங்கள் பெரும்பங்கு இடத்தை நிரப்பியுள்ளன. இந்த நிறுவனங்கள் ஏறக்குறைய 76 சதவீதம் வாடிக்கையாளர்களைக் கையில் வைத்துள்ளன. சாம்சங் நிறுவனம் 15 சதவீதம் வாடிக்கையாளர்களையே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.