Published : 18 Jun 2020 07:37 AM
Last Updated : 18 Jun 2020 07:37 AM

ஊரடங்கு காலத்தில் தவணை சலுகை; வங்கிக் கடன் வட்டி மீது வட்டி வசூலிப்பதில் அர்த்தமில்லை: உச்ச நீதிமன்றம் கருத்து

கரோனா ஊரடங்கு காலத்தில் கடன் தவணை செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த காலத்தில் செலுத்த வேண்டிய வட்டித் தொகைக்கும் சேர்த்து வட்டி கட்ட வேண்டிய சூழல் உள்ளது. இது தொடர்பாக ஆக்ராவைச் சேர்ந்த கஜேந்திர சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில் மார்ச் 27-ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிக்கையின்படி, வங்கிகள் கடன்கள் மீதான வட்டிக்கு வட்டி வசூலிப்பது, சலுகை காலத்தில் தவறானது என உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். சலுகைகாலத்தில் வட்டியை ரத்து செய்யவேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிட்டார்.

இருதரப்பு வாதத்தைக் கேட்டநீதிபதிகள் கூறும்போது, "ஊரடங்கு காலத்தில் கடன் தவணைசெலுத்துவதிலிருந்து சலுகை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. அப்படியெனில் வட்டிக்குவட்டி வசூலிப்பது என்பது சலுகை அளிப்பதை அர்த்தமில்லாததாக்கிவிடும். சலுகை அளிப்பது என முடிவு செய்துவிட்டால், அதுபயனுள்ளதாக இருக்க வேண்டும்.

இந்த விஷயத்தில் அரசு தலையிட வேண்டும். அனைத்து உரிமைகளையும் வங்கிகளிடமே விடுவது சரியல்ல. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் மாதம் நடைபெறும். இதுகுறித்து ரிசர்வ் வங்கியும், அரசும் ஆராய்ந்து உரிய முடிவை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் இந்திய வங்கிகள் சங்கம் சூழ்நிலையை ஆராய்ந்து புதிய வழிகாட்டு நெறிகளை உருவாக்கித் தரலாம்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x