

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த 20 இந்திய ராணுவ வீரர்களில், ஒடிசாவின் நந்து ராம் சோரனும் ஒருவர்.
16 பிஹார் ரெஜிமென்ட்டில் நய்ப் சுபேதாராக பணியாற்றி வந்தார். நந்து ராம் (43), மயூர்பாஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவர். சந்தாலி பழங்குடியினத்தை சேர்ந்த இவர், 1997-ல் ராணுவத்தில் சேர்ந்தார். மிகப்பெரிய குடும்பத்தின் வருவாய் ஈட்டும் ஒரே நபர் இவர்தான்.
இவரது தம்பி தாமன் சோரன் கூறும்போது, “எங்களின் 4 சகோதர்களில் நந்து ராம் மூத்தவர். எங்களுக்கு பொருளாதார ரீதியாக உதவி வந்தார். எங்கள் பெற்றோர் உயிருடன் இல்லாததால் நந்து ராமே குடும்பத் தலைவராக பொறுப்புகளை கவனித்து வந்தார். நந்து ராமின் மனைவியும் அவரது 3 மகள்களும் இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் வசிக்கின்றனர். நந்து ராம் இறந்த தகவலை அவரது மனைவியால் தாங்கிக் கொள்ள முடியுமா எனத் தெரியவில்லை” என்றார்.
நந்து ராமின் உள்ளூர் நண்பரும் 16 பிஹார் ரெஜிமென்ட்டில் பணியாற்றி இம்மாதம் ஓய்வு பெற்றவருமான மகேந்திர நாத் மகந்தா கூறியதாவது:
நாங்கள் இருவரும் ஒரே பிரிவில் சுமார் 8 ஆண்டுகள் பணியாற்றினோம். 2 மாதங்களுக்கு முன் அவருடன் தொலைபேசியில் பேசினேன். அடுத்த முறை ஊருக்கு வரும்போது என்னை சந்திப்பதாக கூறினார். அவர் இறந்துவிட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.
சீன ராணுவத்தினர் நம் முதுகில்குத்திவிட்டனர். எதிரிகளை கண்ணால் பார்த்து போரிட வேண்டும் என இந்திய ராணுவத்தில் கற்றுத்தருகின்றனர். நாம் ஒருபோதும்பின்னால் இருந்து தாக்குவதில்லை. சீனாவுக்கு நாம் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.
இவ்வாறு மகேந்திர நாத் மகந்தா கூறினார்.