

‘‘சீன ராணுவத்தினரின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த நமது வீரர்களின் உயிர்த் தியாகத்தை நாடு ஒருபோதும் மறக்காது’’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
லடாக் பகுதி எல்லையில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் எதிர்த்து நின்று போராடி நமது வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். வீரர்களின் தியாகத்துக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பதிவில் உருக்கமாக கூறியிருப்பதாவது:
கல்வான் பகுதியில் நமது வீரர்களை இழந்தது மிகுந்த மன உளைச்சலையும் ஆழ்ந்த வேதனையையும் தருகிறது. கடமையில் தங்களது வீரத்தையும் துணிச்சலையும் வெளிப்படுத்தி நமது வீரர்கள் முன்னுதாரணமாக விளங்கியுள்ளனர். இந்திய ராணுவத்தின் உயர்ந்த பாரம்பரியத்தின்படி நாட்டுக்காக வீரர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். வீரமரணம் அடைந்த நமது வீரர்களின் உயிர்த் தியாகத்தை நாடு ஒரு போதும் மறக்காது. உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். இந்த நெருக்கடியான நேரத்தில் இறந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக நாடே தோளோடு தோள் நின்று உறுதுணையாக இருக்கும். நமது வீரர்களின் துணிச்சலும் வீரமும் நம்மை பெருமிதம் கொள்ளச் செய்கிறது. இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.