

இந்திய ராணுவ வீரர்களுடனான மோதலில் தங்கள் தரப்பில் எத்தனை உயிரிழப்பு என்பதை சீனா தொடர்ந்து மறைத்து வருவது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.
மேலும், இந்தியாவுடனான எல்லைப் பகுதிகளில் இனியும் மோதலும், சச்சரவும் ஏற்படுவதை விரும்பவில்லை எனவும் அந்நாடு தெரிவித்துள்ளது.
சீனாவை ஒட்டியுள்ள லடாக் எல்லையில் இந்தியப் பகுதிக்குள் சாலை அமைக்கும் பணி கடந்த மே மாதத் தொடக்கத்தில் நடை பெற்றது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா, அந்தப் பகுதி தங்களுக்கு சொந்தமானது என்றும், அங்கிருந்து இந்திய ராணுவப் படை வெளியேற வேண்டும் எனவும் கூறியது.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதிக்குள் சீன ராணுவப் படையினர் அத்துமீறி நுழைய முயன்றனர். இதனை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்தபோது இரு தரப்புக்கும் இடையே லேசான மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, இரு நாடுகளும் தங்கள் ராணுவ வீரர்களை அங்கு குவித்ததால் இந்திய – சீன எல்லைப் பகுதியில் பதற்றம் உருவாகியது.
இதனிடையே, இரு தரப்பைச் சேர்ந்த ராணுவ உயரதிகாரிகள் தலைமையில் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, அந்தப் பகுதியில் இருந்து ராணுவ வீரர்களை விலக்கிக் கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, கடந்த திங்கள்கிழமை மாலைசீன ராணுவப் படைகள் அங்கிருந்து வெளியேறும் போது, இந்திய ராணுவத்தினரை இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் அவர்கள் திடீரென தாக்கியதாக கூறப்படுகிறது. இதற்கு இந்தியா சார்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. இந்த பயங்கர மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். சீனா தரப்பில் 43 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகின.
எனினும், தங்கள் நாட்டு ராணுவவீரர்கள் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதை சீனா தொடர்ந்து மறைத்து வருகிறது. மேலும், அந்நாட்டு அரசு ஊடகங்கள் உட்பட எந்தவொரு பத்திரிகைகளிலும் உயிரிழப்பு குறித்த எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
இந்தியாவை ஒப்பிடும்போது, சீனத் தரப்பில் உயிரிழப்பு எண்ணிக்கை மிக அதிகம் என்பதாலேயே அதனை வெளியிட சீன அரசு தயங்குவதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சீனா திடீர் சமாதானம்
லடாக் எல்லையில் இந்திய – சீன ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே உச்சக்கட்ட போர் பதற்றம் உருவாகி உள்ளது. இந்த விவகாரம் குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜா லிஜியான் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
லடாக் எல்லையில் சீனாவுக்கு சொந்தமான பகுதியில் இந்திய ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதுவே இந்த மோதலுக்கு மூலக்காரணம். சீன எல்லையில் அத்துமீறுவதில் இருந்து இந்தியா தனது ராணுவத்தை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். ஒருதலைபட்சமாக இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கையால் இரு நாட்டு எல்லை விவகாரம் மேலும் பிரச்சினை ஆகிவிடும்.
இந்தியாவுடனான எல்லையில் இனியும் மோதல் ஏற்படுவதை சீனா விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.