

பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பில் கலந்துக்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று காலை ஜும்மா மசூதிக்கு சென்று தொழுகை செய்தார். பின்னர், ஜும்மா மசூதியின் இமாம் சயீத் புகாரியையும் அவர் சந்தித்தார்.
மோடி பதவியேற்பு விழாவில் கலந்துக்கொண்ட பின்னர் நேற்றிரவு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அளித்த விருந்தில் பங்கேற்ற நவாஸ் ஷெரிப் டெல்லியில் தங்கியுள்ளார்.
முகலாயர்களின் காலத்தில் கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததும், ஆசியாவின் மிகப் பெரிய மசூதியுமான ஜும்மா மசூதிக்கு இன்று காலை சென்ற நவாஸ் ஷெரீப், அங்கு தொழுகை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து, அவர் ஜும்மா மசூதியின் இமாம் சயீத் புகாரியையும் சந்தித்தார்.
இது குறித்து ஜும்மா மசூதி இமாம் புகாரி செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, நவாஸ் ஷெரீப்பை பதவியேற்புக்கு அழைத்த விதமும், அதனை ஏற்று உற்சாகத்துடன் பாகிஸ்தான் பிரதமர் இந்தியாவிற்கு வருகை தந்ததும் வரவேற்கத்தக்கது.
இந்தியா - பாகிஸ்தான் உடனான உறவு சுமூகமாக அமைய வேண்டும் என்றே பாகிஸ்தான் பிரதமர் எதிர்ப்பார்க்கிறார். இரு தரப்பிலும் வேறுபாடுகள் குறைய வாய்ப்பு அமைந்துள்ளது. இரு நாடுகளின் தலைவர்களும் இனி வரும் காலங்களில் அமைதியையும் மகிழ்ச்சியான உறவையும் மேம்படுத்தும் நோக்கத்தோடு செயல்பட வேண்டும்" என்றார்.
மேலும், இரு நாடுகளின் உறவை மேம்படுத்த விரும்புவதாக, பிரதமர் மோடியிடம் தாம் கூற இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.