Last Updated : 17 Jun, 2020 08:36 PM

 

Published : 17 Jun 2020 08:36 PM
Last Updated : 17 Jun 2020 08:36 PM

இந்தியாவில் கரோனா பலி எண்ணிக்கை; ஒரே நாளில் 2000-ஐத் தாண்டியது எப்படி?

கரோனா பாதிப்பில் உலகில் 4-வது இடத்தில் இருக்கிறது இந்தியா. தினமும் கரோனா காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 300 முதல் 400 வரையில் இருந்தது. திடீரென நேற்று (16-ம் தேதி) அந்த எண்ணிக்கை 2000-ஐத் தாண்டியது.

உலக அளவில் நேற்று மட்டும் கரோனாவால் அதிகமானோர் இறந்த நாடுகள் பட்டியலில், திடீரென இந்தியா முதலிடத்துக்குப் போய்விட்டது. இது கரோனா பாதிப்புகளை உன்னிப்பாகக் கவனித்து வரும் பொது மக்களுக்குப் பெருத்த அதிர்ச்சியைத் தந்தது. இன்னமும் சமூகத் தொற்றாக மாறவில்லை என்று அரசு சொல்கிறபோதே இப்படி என்றால், நவம்பரில் உச்சம் தொடும் என்கிறார்களே அப்போது தினசரி இறப்போர் எண்ணிக்கை இன்னும் உயர்ந்துவிடுமோ என்ற அச்சம் இப்போது மக்கள் மத்தியில் மேலோங்கி நிற்கிறது.

ஆனால், இந்த இறப்புக் கணக்கு ஒரு பிழையான கணக்கு என்று தெரியவந்திருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட சில மரணங்கள் கரோனா மரணப் பட்டியலில் சேர்க்கப்படாமல் விடுபட்டுப் போய்விட்டன. இவ்வாறு மகாராஷ்டிர மாநிலத்தில் விடுபட்டுப்போன மரணங்கள் எத்தனை என்று அம்மாநில அரசும், உள்ளாட்சி நிர்வாகங்களும் தணிக்கை செய்தன.

அப்போது மொத்தம் 1,328 மரணங்கள், மாநில அரசு வெளியிட்ட எண்ணிக்கையில் சேர்க்கப்படாமல் இருப்பது தெரியவந்தது. உடனே அதனை நேற்றைய (16-ம் தேதி) இறப்பு எண்ணிக்கையுடன் சேர்த்துவிட்டது அம்மாநில அரசு. இதுதான் இந்திய இறப்பு எண்ணிக்கை திடீரென 2000-ஐத் தாண்டியதற்கு காரணம் என்று மகாராஷ்டிர மாநில தலைமைச் செயலாளர் அஜய் மேத்தா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் கூறுகையில், "கரோனா பலி எண்ணிக்கையை குறைத்துக்காட்ட அரசு முயற்சிக்கிறது என்று ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் குற்றம் சாட்டிவந்தோம். ஆனால், அரசு எந்தப் பதிலும் சொல்லாமல் இருந்தது. இப்போது, 1,328 மரணங்களை முறைப்படி பதிவு செய்யாமல் விட்டுவிட்டோம் என்று அரசே ஒப்புக்கொண்டுவிட்டது. இனியாவது உண்மையை மூடிமறைக்க முயற்சிக்காமல் கரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கையைத் தீவிரப்படுத்த வேண்டும்" என்றார்.

தமிழ்நாட்டிலும் இப்படி இறந்தவர்கள் எண்ணிக்கை அரசால் மறைக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x