Last Updated : 17 Jun, 2020 05:19 PM

 

Published : 17 Jun 2020 05:19 PM
Last Updated : 17 Jun 2020 05:19 PM

பிஎம் கேர்ஸ்க்கு வந்த நிதியை தேசிய பேரிடர் நிதிக்கு மாற்றக் கோரும் வழக்கு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

மத்திய அரசு தொடங்கிய பிஎம் கேர்ஸ் அறக்கட்டளையில் தனிநபர்கள், நிறுவனங்கள் மூலம் அளிக்கப்பட்ட நன்கொடையை, தேசிய பேரிடர் நிதிக்கு மாற்றக் கோரி பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசு பதில் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

கரோனா நிவாரணத்திற்காக உருவாக்கப்பட்ட பிஎம் கேர்ஸ் என்ற பிரத்யேக நிவாரண நிதியம் ‘பப்ளிக் அதாரிட்டி’ அல்ல. எனவே ஆர்டிஐ சட்டத்தின் கீழ் வராது என்று கூறி ஆர்டிஐ விண்ணப்பதாரர் ஸ்ரீ ஹர்ஷா கந்துகுரி என்பவர் கேட்டிருந்த விவரங்களை அளிக்க பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது.

அதில், “பிஎம் கேர்ஸ் நிதியம் தகவலுரிமைச் சட்டம், 2005 பிரிவு 2 ஹெச்-ன் படி பொது அதிகாரத்தின் கீழ் வராது. இது தொடர்பான விவரங்களை pmcares.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டு விவரங்களை அளிக்க மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிபிசிஎல் எனும் தனியார் தொண்டு நிறுவனம் பிஎம் கேர்ஸ் நிதி அனைத்தையும் தேசிய பேரிடர் நிதிக்குக் கொண்டு வரக் கோரி பொதுநல மனுத்தாக்கல் செய்துள்ளது.

இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

''பிஎம் கேர்ஸ் அறக்கட்டளையில் இன்று வரை பங்களிக்கப்பு செய்யப்பட்டுள்ள பல ஆயிரம் கோடி ரூபாயின் குறிப்பிட்ட பயன்பாடு குறித்த தகவல்களைப் பலமுறை கேட்டும் அதை வெளியிட மறுத்து வருகிறார்கள். தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டம் பிரிவு 11-ன்படி பேரிடர் மேலாண்மைச் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தும்போது, அதற்காக தேசிய அளவில் ஒரு பொதுத்திட்டம் உருவாக்கிச் செயல்பட வேண்டும் என்பது கட்டாயமாகும். ஆனால், தற்போது அதுபோன்ற கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தேசிய அளவிலான திட்டம் ஏதும் இல்லை. வழக்கமான பேரிடர் என்ற வார்த்தையைக் குறிப்பிட்டு மட்டுமே, பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிடுகிறது.

தேசிய அளவிலான திட்டம் தயாரிக்கும்போது அனைத்து மாநில அரசுகளையும், வல்லுநர்களையும் அழைத்து அவர்களின் ஆலோசனையின்படி திட்டம் வகுக்கப்பட வேண்டும். உலக அளவில் கரோனாவால் அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளதால் அவசர கதியில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தாலும், லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டு 2 மாதங்கள் ஆகியும் கரோனா பெருந்தொற்றைச் சமாளிக்க தேசிய அளவிலான எந்தத் திட்டமும் இல்லையே?

கடந்த 2019-ம் ஆண்டுக்கான செயல்திட்டமே சமீபத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுளளது. ஆனால், அதே திட்டமிடலே தற்போது நாடு முழுவதும் நிலவும் கரோனா பெருந்தொற்றுக்கு முழுமையாக வைத்து சமாளிக்க முடியாது. அந்தத் திட்டத்தில் லாக்டவுன், தனிமைப்படுத்தப்பட்ட முகாம்கள், சமூக விலகல் குறித்த எந்த வார்த்தைகளும், திட்டங்களும் இல்லை.

எதிர்காலத்தில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த லாக்டவுன் கொண்டுவருவது குறித்து தேசிய அளவிலான விரிவான திட்டம், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான விரிவான கூட்டுறவு செயல்திட்டம், சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் மக்களை அடிப்படையாக வைத்து சமூக விலகல் விதிகள் கொண்டுவருவது, குறைந்த அளவில் போக்குவரத்தை அனுமதிப்பது, அத்தியாவசியப் பணிகளை அனுமதிப்பது, தனிமைப்படுத்தும் வசதிகளை அதிகப்படுத்துதல், பரிசோதனைக் கருவிகளை உற்பத்தி செய்தல், ரேபிட் கிட், பிபிஇ கிட் போன்றவற்றை உற்பத்தி செய்தல் போன்றவை குறித்து தேசிய அளவிலான திட்டத்தில் இடம் பெறுவது அவசியம்.

ஆதலால், பிஎம் கேர்ஸ் நிதிக்கு தனி நபர்கள், அரசு நிறுவனங்கள் அளித்த நன்கொடை அனைத்தையும் கரோனா பெருந்தொற்றைச் சமாளிக்க கொண்டுவரப்பட்ட தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் இருக்கும் பேரிடர் மேலாண்மை நிதியில் சேர்க்க உத்தரவிட வேண்டும்.

பிஎம் கேர்ஸ் நிதியில் இருக்கும் அனைத்து நிதியையும் தேசிய பேரிடர் மேலாண்மை நிதிக்கு மாற்றி தற்போது மக்கள் சந்தித்து வரும் கரோனா சிக்கலுக்கு வழங்கிட வேண்டும்''.

இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன், எஸ்.கே.கவுல், எம்ஆர் ஷா ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜரானார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு, அடுத்த இரு வாரங்களுக்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x