எங்களைச் சீண்டினால் தக்க பதிலடி கொடுப்போம்: சீனாவுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

பிரதமர் மோடி பேசிய காட்சி: படம் | ஏஎன்ஐ
பிரதமர் மோடி பேசிய காட்சி: படம் | ஏஎன்ஐ
Updated on
1 min read

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்கள் செய்த உயிர்த்தியாகம் வீண் போகாது. அதேசமயம் இந்தியாவைச் சீண்டினால் தகுந்த பதிலடி கொடுப்போம் என்று சீனாவுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் திங்கள்கிழமை இரவு இந்திய, சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவத்தினர் வீரமரணம் அடைந்தனர். அதேபோல, சீன ராணுவம் தரப்பில் 35 பேர் வரை உயிரிழந்திருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவிக்கிறது.

எல்லையில் இந்திய வீரர்கள் மீதான தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்க வரும் வெள்ளிக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பிரதமர் மோடி காணொலி வாயிலாகக் கூட்ட அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இரு நாட்கள் ஆலோசனை நடத்தி வருகிறார். முதல் நாளான நேற்று 21 மாநில முதல்வர்ளுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி, கருத்துகளைக் கேட்டறிந்தார். இந்நிலையில் தமிழகம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், குஜராத் உள்ளிட்ட மற்ற மாநிலங்களின் முதல்வர்களுடன் இன்று பிரதமர் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

மாநில முதல்வர்களுடன் காணொலி நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன் எல்லையில் வீரமரணம் அடைந்த 20 வீரர்களுக்கும் 2 நிமிடங்கள் பிரதமர் மோடி மவுன அஞ்சலி செலுத்தினார்.

அதன்பின் பிரதமர் மோடி பேசுகையில், “கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடனான மோதலில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் உயிர்த்தியாகம் வீண்போகாது. இந்தியா அமைதியை விரும்புகிறது. ஆனால், இந்தியாவைச் சீண்டினால், ஆத்திரமூட்டினால் எந்தச் சூழலிலும் தக்க பதிலடி கொடுக்கும் வல்லமை உடையது'' என்று சீனாவுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் மோடி பேசுகையில், ''நம் தேசத்துக்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் தியாகம் வீண்போகாது என்று மக்களுக்கு உறுதியளிக்கிறேன். இந்தியாவைப் பொறுத்தவரை தேசத்தின் ஒற்றுமை மற்றும் இறையாண்மை மிகவும் முக்கியமானது. இந்தியா எப்போதும் பிரச்சினைக்குள் செல்ல முயற்சிக்காது, வேறுபாடுகளைக் களையவே முயற்சிக்கும்'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in