Last Updated : 17 Jun, 2020 11:50 AM

 

Published : 17 Jun 2020 11:50 AM
Last Updated : 17 Jun 2020 11:50 AM

மவுனம் ஏன்? ஏன் மறைக்கிறார்; நம் வீரர்களைக் கொல்லும் துணிச்சல் சீனாவுக்கு எப்படி வந்தது?  பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சரமாரிக் கேள்வி

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டு 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த நிலையில் இன்னும் ஏன் பிரதமர் மோடி மவுனமாக இருக்கிறார். என்ன நடந்தது என்பதை தேசத்தின் மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் திங்கள்கிழமை இரவு இந்திய, சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவத்தினர் உயிரிழந்ததாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, சீன ராணுவம் தரப்பில் 43 பேர் வரை உயிரிழப்பு, காயமடைந்திருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கிறது. இதனால் இரு நாட்டு எல்லைகளிலும் பெரும் பதற்றம் நீடிக்கிறது. 45 ஆண்டுகளுக்குப் பின் இந்திய-சீன ராணுவ மோதலில் முதல் முறையாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு ட்விட்டர் வாயிலாக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில், “கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் 20 இந்திய வீரர்கள் சீன ராணுவத்தினருடன் மோதலில் கொல்லப்பட்ட நிலையிலும் இன்னும் பிரதமர் மோடி ஏன் மவுனம் காக்கிறார். பிரதமர் மோடி எதை மறைக்கிறார். எல்லையில் என்ன நடந்தது என்பதை தேசத்தின் மக்கள் தெரிந்துகொள்வது அவசியம்.

நம்முடைய இந்திய ராணுவ வீரர்களைக் கொல்வதற்கு சீன ராணுவ வீரர்களுக்கு எவ்வாறு துணிச்சல் வந்தது. நம்முைடய எல்லைக்குள் அத்துமீறி நுழைய எவ்வாறு சீன ராணுவத்தினருக்கு துணிச்சல் வந்தது” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் ட்விட்டரில் வீடியோ மூலமும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். அந்த வீடியோவில் ராகுல் காந்தி பேசுகையில், “கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்தினருடன் நடந்த மோதலில் உயிரிழந்த இந்திய வீரர்களின் குடும்பத்தினருக்கு வருத்தங்களைத் தெரிவிக்கிறேன்.

இரு நாட்களில் நாம் 20 வீரர்களை இழந்திருக்கிறோம், அவர்களின் குடும்பத்தாரிடம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டார்கள். வெளியே வந்து உண்மையைக் கூறுங்கள் பிரதமர் மோடி. சீனா நமது நிலத்தை அபகரித்து, நமது பகுதியை ஆக்கிரமித்திருக்கிறது.

இன்னும் ஏன் பிரமதர் மோடி மவுனமாக இருக்கிறார். எங்கு மறைந்திருக்கிறீர்கள். வெளிேய வாருங்கள். இந்த தேசம் உங்களுக்கு ஆதரவாக துணை நிற்கும். நாங்கள் உங்களோடு இருக்கிறோம். வெளியே வந்து உண்மையைக் கூறுங்கள். அச்சப்படாதீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x