

கல்வான் பள்ளாதாக்குப் பகுதியில் திங்கள்கிழமை இரவு இந்திய, சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவத்தினர் உயிரிழந்ததாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சண்டையில் வீர மரணம் அடைந்த தெலங்கானாவைச் சேர்ந்த ராணுவ கமாண்டிங் அதிகாரி சந்தோஷ் பாபுவின் பெற்றோர் தங்களுக்கு ஆழ்ந்த அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
16 பிஹார் ரெஜிமண்டில் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கமாண்டிங் ஆபிசராகப் பணியாற்றி வந்தார் சந்தோஷ் பாபு. சீனாவுடன் ஏற்பட்ட சண்டையில் இவர் வீரமரணம் அடைந்தார். இவர் தெலங்கானா மாநிலம் சூரியாபேட் பகுதியைச் சேர்ந்தவர்.
எதிர்பாராத இந்த மரணத்தினால் சந்தோஷ் பாபுவின் பெற்றோரான உபேந்தர் மற்றும் மஞ்சுளா தங்களால் நம்ப முடியவில்லை என்றும் பிறகுதான் உயரதிகாரிகள் தகவல் தெரிவித்ததையடுத்தே அதிர்ச்சித் தகவல் எங்களை தீரா வேதனையில் ஆழ்த்தி விட்டது என்று தெரிவித்தனர்.
சந்தோஷ் பாபுவின் தாய் மஞ்சுளா ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்குக் கூறும்போது, “நேற்று மதியம் 2 மணியளவில் எங்களுக்குச் செய்தி வந்தது. எங்கள் மகன் வீர மரணம் அடைந்தான் என்ற செய்தியை எங்களால் நம்ப முடியவில்லை” என்றார்.
கலோனல் சந்தோஷ் பாபுவின் தந்தை உபேந்தர் கூறும்போது, “நாங்கள் ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தோம், எங்கள் மகன் மரணமடைந்த செய்தியை எங்களால் நம்ப முடியவில்லை. ஏனெனில் சந்தோஷ் மிகவும் தைரியமானவன். கடந்த 15 ஆண்டுகளாக அவன் வெற்றியடைந்து வந்திருக்கிறான்.
நான் உடனே ஒரு அதிகாரியிடம் தொடர்பு கொண்டு கேட்டேன். பிறகு ராணுவத்தின் பல அதிகாரிகளும் எங்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த போதுதான் எங்கள் மகன் உயிர்த்தியாகம் தெரியவந்தது. இந்த ராணுவ அதிகாரிகள்தான் சந்தோஷ் உடலை சூரியாபேட் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
இன்று மாலை எங்கள் மகன் சந்தோஷ் உடல் சூரியாபேட் வந்து சேரும். அதிகாரிகளும், தலைவர்களும் முழு ஆதரவு அளிப்பதாக உறுதியும் தைரியமும் அளித்துள்ளனர்” என்றார்.