

உயர் அதிகாரிகள் தங்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான பொது விதிமுறைகளை மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளது. இதில் மருத்துவம் பயின்ற குடிமைப்பணி அதிகாரிகளை தேர்வு செய்து கரோனா தடுsப்புப் பணியில் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது.
நாடு முழுவதையும் அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் பரவல்மத்திய, மாநில அரசு அலுவலகங்களையும் விட்டு வைக்கவில்லை. இதனால், ஒவ்வொரு அரசு அலுவலகமும் சூழலுக்கு ஏற்றபடி தன்அதிகாரிகளின் பணிகளை அமைத்து செயல்பட்டு வருகிறது.இதன் பிறகும் மத்திய அமைச்சகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு ஓரிரு நாட்களுக்கு மூடி வைக்க வேண்டி உள்ளது. எனவே, இதுபோன்ற அலுவலகப் பணிகளை தேசிய அளவில் முறைப்படுத்தி பொது விதிமுறைகளை உருவாக்கி வருகிறது மத்திய உயர் அதிகாரிகள் மற்றும் பயிற்சித் துறை அமைச்சகம் (டிஓபிடி).
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் மத்திய டிஓபிடி அமைச்சக வட்டாரத்தினர் கூறும்போது, "ஜுன் 12-ம் தேதி எங்கள் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் நடத்திய கூட்டத்தில் பொதுவிதிமுறைகளை வெளியிட முடிவுசெய்து ஆலோசனை நடைபெறுகிறது. இதில் மருத்துவக்கல்வி பயின்று குடிமைப்பணி அதிகாரிகளாகப் பணியாற்றி வருபவர்களை கரோனா பணிகளில் நேரடியாக களம் இறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றனர்.
மருத்துவக்கல்வி முடித்த ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், ஐஆர்டிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணி அதிகாரிகள் பலரும் வெளிமாநிலம் மற்றும்வெளிநாடுகளின் அயல்பணிகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்களை தம் பணிசார்ந்த மாநிலங்கள் அல்லது துறைகளுக்கு திரும்பும்படியும் டிஓபிடி கடிதம் எழுத உள்ளது. முதல்நிலை அதிகாரிகளாகப் பணியாற்றும் மருத்துவக்கல்வி பயின்றவர்களும் இப்பட்டியலில் சேர்க்கப்பட உள்ளனர். இவர்களை மத்திய அரசு அலுவலகங்கள் எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் பொது விதிமுறைகள் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள மத்திய அமைச்சகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களின் அதிகாரிகளுக்கான பணிகளும் முறைப்படுத்தாமல் உள்ளதாகக் கருதப்படுகிறது. இவர்களுக்கு வீட்டிலேயே பணி செய்ய மடிக்கணினி விநியோகிப்பது, வேலைநேரம் உள்ளிட்டவை குறித்தும் பொது விதிமுறைகளை டிஓபிடிவெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக வெளியிடப்பட உள்ள இந்த பொது விதிமுறைகளையே மாநிலங்களுக்கும் அனுப்பி செயல்படுத்தப்படும் வாய்ப்புகள் உள்ளன.