இந்திய தூதரக ஊழியர்கள் கடத்தப்பட்ட சம்பவம்; பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம்

இந்திய தூதரக ஊழியர்கள் கடத்தப்பட்ட சம்பவம்; பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம்
Updated on
1 min read

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்திய தூதரக ஊழியர்கள் இருவரை கடத்திச் சென்று சித்தரவதை செய்த சம்பவத்துக்கு அந்நாட்டு தூதரை நேரில் அழைத்து இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்திய தூதரகத்தின் ஓட்டுநர்கள் இருவர் திங்களன்று பல மணி நேரங்களாகக் காணாமல் போயினர். பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் கடத்தியிருக்கலாம் என்று ஐயம் எழுந்தது. இந்நிலையில் பால் செல்வதாஸ், திவிமு பிரம்மா ஆகிய இருவர் பாகிஸ்தானால் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்களை விடுவித்ததையடுத்து பாகிஸ்தான் வெளியுறவு விவகாரத் துறை கூறுகையில் இரண்டு ஓட்டுநர்களும் விபத்து ஏற்படுத்தியதால் கைது செய்யப்பட்டனர் என்று கூறியுள்ளது. முன்னதாக போலீஸ் அறிக்கையில் இருவரும் கள்ளநோட்டுகளை சப்ளை செய்து கொண்டிருந்ததாக கூறப்பட்டிருந்தது, ஆனால் இதனை வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்யவில்லை.

பால் செல்வதாஸ், திவிமு பிரம்மா இருவரது உடல்களிலும் போலீஸார் அடித்ததற்கான காயங்கள் தெரிந்தன. இவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.

கடந்த வாரம் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றி வந்த இரு தூதரக அதிகாரிகள் அபித் ஹூசைன், முகமது தாஹரி் ஆகியோர் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, அவர்களை இந்திய அரசு வெளியேற்றியது.

இந்தச் சம்பவத்துக்குப் பின் இந்த வாரத்தில் இந்தியத் தூதரகத்தின் இரு ஊழியர்களைக் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை இந்தியா வெளியேற்றியபின், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் தொந்தரவு அளித்து வந்தது. இதற்கு இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் புதுடெல்லியில் உள்ள இந்தியவுக்கான பாகிஸ்தான் தூதர் ஹைதர் ஷாவை வெளியுறவு அமைச்சகம் நேரில் அழைத்து இந்தியா சார்பில் கண்டனத்தை பதிவு செய்தது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்திய தூதரக ஊழியர்கள் இருவரை கடத்திச் சென்று சித்தரவதை செய்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in