Published : 16 Jun 2020 08:25 PM
Last Updated : 16 Jun 2020 08:25 PM

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை; தனியார் மருத்துவமனைகளுடன் பேச்சுவார்த்தை: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி

கரோனா நோயாளிகளுக்கு மேம்படுத்தப்பட்ட படுக்கை வசதி, அவசர சிகிச்சை வசதிகளை அளிப்பதற்கும், மருத்துவ சேவைகளுக்கு நியாயமான, வெளிப்படையான கட்டணத்தை உறுதி செய்வதற்கும், தாமாக முன்வந்து தனியார்துறை மருத்துவமனைகளுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம், மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு, ஒடிசா, மகாராஷ்டிரா, குஜராத் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளன. கொவிட் நோயாளிகளுக்கு நியாயமான கட்டணம் மற்றும் தீவிர சிகிச்சை ஏற்பாடு செய்வது தொடர்பாக தனியார் மருத்துவமனைகளுடன் அந்த மாநிலங்கள் ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்துள்ளன.

தனியார் துறை மருத்துவமனைகளுடன் ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தவும், கொவிட் நோயாளிகளுக்கு பொது மற்றும் தனியார் துறை சுகாதார வசதிகள் கிடைப்பதை கருத்தில் கொள்ளவும், மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. இது நியாயமான, நல்ல தரமான சிகிச்சை கிடைக்க உதவும்.

நாட்டில் கரோனா நோயாளிகளை கண்டறிவதற்கான பரிசோதனை திறன் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஒரு நாளைக்கு 3 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கும் திறன் நம் நாட்டில் உள்ளது. இதுவரை 59,21,069 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 1,54,935 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

நாட்டில் தற்போது வரை 907 பரிசோதனை கூடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் 659 அரசுத்துறை, 248 தனியார் துறையைச் சார்ந்தது. இதன் விவரங்கள் வருமாறு:

நிகழ்நேர RT PCR அடிப்படையிலான பரிசோதனைக் கூடங்கள்: 534 (அரசு : 347 + தனியார்:187)

TrueNat அடிப்படையிலான பரிசோதனைக் கூடங்கள்: 302 (அரசு: 287 + தனியார்:15)

CBNAAT அடிப்படையிலான பரிசோதனைக் கூடங்கள்: 71 (அரசு: 25 + தனியார் :46)

புதுடெல்லி பரிசோதனை திறனை அதிகரிக்க, 11 மாவட்டங்களிலும் தனித்தனியாக பரிசோதனைக் கூடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தாமதம் இல்லாமல் சரியான நேரத்தில் பரிசோதனை செய்து முடிவுகள் அறிய, ஒவ்வொரு மாவட்டத்தின் மாதிரிகளும் அந்தந்த பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

டெல்லியில் தற்போது 42 பரிசோதனைக் கூடங்கள் உள்ளன. இங்கு ஒரு நாளைக்கு தோராயமாக 17,000 மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x