

லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவத்தினரிடையே மோதலில் 3 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டது குறித்து பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மோடி தலைமை மத்திய அரசுக்கு எச்சரிக்கை மணி ஒலித்துள்ளார்.
மத்திய அரசு இனியும் கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் அது சீனாவின் போர்க்குணத்தை இன்னும் அதிகரிக்கவே செய்யும் என்று அவர் எச்சரித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த இந்தத் தாக்குதல் சீனாவின் தொடர் அத்துமீறலாகும். இத்தகைய அத்துமீறல்களுக்கு எதிராக இந்தியா எழுந்து நின்று எதிர்கொள்ள வேண்டிய தருணமாகும் இது. நம் எல்லைகளைப் பாதுகாக்கும் வீரர்கள், ராணுவ அதிகாரிகள் கொல்லப்படுவது நியாயம் கிடையாது.
மேலும் கண்டிப்பான நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணமாகும் இது. நம் பலவீனத்தைக் காட்டும் ஒவ்வொரு அறிகுறியும் சீனாவின் எதிர்வினை இன்னும் போர்க்குணத்தை அதிகரிக்கச் செய்வதையே தூண்டும். நாம் பலவீனத்தின் அறிகுறிகளைக் காட்டக் காட்ட சீனா அதிகம் போர்க்குணத்தையே காட்டும்.
வீரமரணம் எய்திய நம் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த தேசத்துடன் நானும் இணைகிறேன். உங்கள் துயரத்தில் நாடு உங்களுடன் நிற்கிறது.
இவ்வாறு அமரீந்தர் சிங் தெரிவித்தார்.