Published : 16 Jun 2020 04:01 PM
Last Updated : 16 Jun 2020 04:01 PM

இந்திய-சீன எல்லையில் 1975-க்குப் பிறகு  உயிரிழப்புகளை ஏற்படுத்திய மோதல் 

கிழக்கு லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் நேற்று இரவு இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் நடந்தது. சீன ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

சீன தரப்பிலும் உயிரிழப்புகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எண்ணிக்கை தெரிவிக்கப்படவில்லை. சீன தரப்புக்கும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக ராணுவம் தன் அறிவிப்பை திருத்தி அறிவித்துள்ளது.

பொதுவாக 1967-ல் இந்தியா-சீனா துருப்புகளிடையே ஏற்பட்ட மோதல்தான் கடைசி துப்பாக்கிச் சூடு என்று கூறப்படுவதுண்டு.

1962- போரில் தோற்ற பிறகு 5 ஆண்டுகள் சென்று 1967-ல் சிக்கிமில் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் சீனாவுக்கு சேதம் ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டது. இதில் இருதரப்பினருக்கும் ஏற்பட்ட உயிரிழப்புகள் எண்ணிக்கைக்கு அடுத்தபடியாக பெரிய துப்பாக்கிச் சூடு உயிரிழப்புகள் இல்லை என்று கூறப்படுவதுண்டு. ஆனால் 1975-ல் துலுங் லா பகுதியில் சீன ராணுவத்தினர் தாக்குதலில் அசாம் ரைபிள்ஸ் ராணுவ வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்திய-சீன சிக்கல் குறித்து முன்னாள் அயலுறவு செயலரும் சீனாவுக்கான தூதருமான நிருபமா ராவ், கூறும்போது, “1967ல்தான் கடைசி வன்முறையான தாக்குதல் இருதரப்பிலும் நடத்தப்பட்டது, 1975 மோதல் ஒரு விபத்து என்று கூறப்படுவது உண்மைக்குப் பொருத்தமானதாக இல்லை. அது திட்டமிட்ட தாக்குதல் அதில் நம் நாட்டு ராணுவ வீரர்கள் 4 பேர் பலியாகினர்.

ஆனால் அக்டோபர் 20,1975-ல் சீன ராணுவத்தினர் லைன் ஆஃப் ஆக்சுவல் கண்ட்ரோல் எனப்படும் எல்.ஏ.சி-யை சீனர்கள் எல்லைகடந்து வந்து தாக்குதல் நடத்தியதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

அப்போதும் இந்திய வீரர்கள் அத்துமீறியதாகவும் சீன முகாம் மீது தாக்கியதாகவும் சீன அயலுறவு அமைச்சகம் தெரிவித்தது. சீனாவின் தாக்குதல் தற்காப்பு உத்தியே என்று சீனா கூறியது. ஆனால் துலங் லா பகுதியில் சீன ராணுவம்தான் அத்து மீறி இந்தியப் பகுதிக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியது என்று ஆதாரங்களுடன் இந்திய தரப்பு தெரிவித்தது.

இந்தப் பகுதியில் துலங் லா கனவாய் மிகவும் தொலைவில் உள்ளதாகும். 1962 போரின் போது இதன் வழியாகத்தான் சீனா தன் துருப்புகளை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சீன ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது. சீன ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்குப் பதில் நடவடிக்கை ஏதும் வேண்டாம், அது மேலும் நிலைமையை மோசமாக்கும் என்று சீன வெளியுறவுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இந்தச் சம்பவத்தையடுத்து லடாக் எல்லையில் இந்திய, சீன ராணுவனத்தின் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சீன எல்லைக்குள் அத்துமீறிய அதிகாரிகளை இந்திய வீரர்கள் தாக்கியதாக சீன ராணுவம் புதிய குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.

எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத்துறை தலைமை அதிகாரி பிபின் ராவத், முப்படைத் தளபதிகள், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்திய- சீன எல்லைப்பகுதியில் உள்ள 3,500 கி.மீ. பகுதி இன்னும் வரையறுக்கப்படவில்லை. இதனால் லடாக், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், திபெத் ஆகிய எல்லைப் பகுதிகளில் சீனா அவ்வப்போது படைகளைக் குவித்து இந்தியாவுக்குத் தொல்லை கொடுத்து வருகிறது.

இந்தியா,சீனா வெளியுறவு அதிகாரிகள் மட்டத்தில் கடந்த 6-ம் தேதி பேச்சுவார்த்தை நடந்தது.

இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் கல்வான் பள்ளாத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியிலிருந்து இரு நாடுகளும் ராணுவத்தை திரும்பப் பெற முடிவு செய்து அதற்கான பணியில் இருந்தபோது இந்தத் தாக்குதலை சீன ராணுவம் நிகழ்த்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x