

கரோனா லாக்டவுன் காரணமாக சரிவர வருமானம் இல்லாமல் குடும்பத்தினரை பட்டினி போட வேண்டிய சூழ்நிலையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பிஹார் தலைநகர் பாட்னாவில் சனிக்கிழமையன்று தற்கொலை செய்து கொண்டார்.
நகைமுரணாக இவரது தற்கொலை செய்தி கிடைத்தவுடன் பாட்னா மாவட்ட மேஜிஸ்ட்ரேட் குமார் ரவி 25 கிலோ கோதுமை மற்றும் அரிசியுடன் குடும்பத்தைச் சந்தித்தார்.
பாட்னாவுக்கு வெளியே புறநகரில் உள்ள ஷாபூரில் வசித்து வரும் இவரது குடும்பம் லாக்டவுனால் மிகுந்த கஷ்டத்துக்கு ஆளாயினர், தினக்கூலியாகவும் வேலை கிடைக்கவில்லை, லாக்டவுனால் ஆட்டோவும் ஓட்ட முடியவில்லை. கடனில் வாங்கிய ஆட்டோவுக்கு தவணைத்தொகையையும் 3 மாதங்களாகச் செலுத்த முடியவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பாக தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சி செய்தியாளர்கள் தற்கொலை செய்து கொண்ட ஆட்டோ ஓட்டுநரின் தந்தையை சந்தித்த போது எவ்வளவு அலைந்தும் தங்கள் குடும்பத்துக்கு ரேஷன் அட்டை கிடைக்கவில்லை என்றார். ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை தெரிந்தவுடன் உடனடியாக அரசாங்கம் வந்து அரிசி கோதுமையைக் கொடுத்துள்ளது. ஆட்டோ ஓட்டுநருக்கு 3 குழந்தைகள்.
இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தகவல்களின் படி பிஹாரில் மே 2020 தகவல்களின்படி வேலையில்லாத் திண்டாட்ட விகிதம் 46.2% ஆக அதிகரித்துள்ளது.