Last Updated : 16 Jun, 2020 10:13 AM

 

Published : 16 Jun 2020 10:13 AM
Last Updated : 16 Jun 2020 10:13 AM

காங்கிரஸ் கட்சியை ‘பழைய கட்டில்’ என்று வர்ணித்து சிவசேனா கிண்டல்

மகாராஷ்ட்ரா மாநிலத்தின் மகாவிகாஸ் கூட்டணியில் பிளவு இருப்பதை உறுதி செய்யும் விதமாக காங்கிரஸ் கட்சியையே கிண்டலடித்துள்ளது ஆளும் சிவசேனாக் கட்சி.

காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோரட், மற்றும் அசோக் சவான் இருவரும் மகாராஷ்ட்ரா மூன்று கட்சி கூட்டணியில் விவகாரங்கள் எழுவதற்கு அதிகாரிகளே காரணம் என்று குற்றம்சாட்டினர்.

இது தொடர்பாக சிவசேனா தனது கட்சிப் பத்திரிகையான சாம்னாவில் கூறியிருப்பதாவது:

காங்கிரஸ் இந்த மாநிலத்தில் நன்றாகத்தான் விளங்குகிறது, ஆனால் பழைய கட்டில் சப்தம் எழுப்புவதுபோல் அவ்வப்போது தன் இருப்பைக் காட்ட பழைய கட்டிலான காங்கிரஸ் கட்சி சப்தம் எழுப்பி வருகிறது. இந்நிலையில் இரண்டு அமைச்சர்களும் முதல்வரைச் சந்திக்கவுள்ளனர். ஆனால் காங்கிரஸ் என்ன சொல்ல விரும்புகிறது? ஏன் இந்தப் பழையக் கட்டில் சப்தமெழுப்பி வருகிறது.

இந்தக் கூட்டணியில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கூட்டணியும்தான் உள்ளது, அவர்களுக்கு எந்த ஒரு பிரச்சினியும் இல்லையே. இருப்பினும் அரசின் மூன்றாம் கால் காங்கிரஸ் கட்சியாக இருப்பதால் நிச்சயம் அதன் கவலைகளை முதல்வர் உத்தவ் தாக்கரே கேட்டறிவார்.

12 எம்.எல்.சி. சீட்டுகள் சமமாக பகிரப்பட்டுள்ளது. எனவே இதுபிரச்சினையல்ல. சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 44 உறுப்பினர்கள் உள்ளனர். சிவசேனாவுக்கு 56, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 54 இடங்கள் உள்ளன. எனவே இதே விகிதத்தில் இடங்களை ஒதுக்குவதும் பிரச்சினையில்லை. அதிகாரப் பரவலாக்கத்தில் சிவசேனா நிறைய தியாகம் செய்துள்ளது.

காங்கிரஸ், என்சிபி சபாநாயகர் பதவிக்கு சண்டையிட்டனர். சரத் பவார் இதில் கடும் ஏமாற்றமடைந்தாலும் சபாநாயகர் பதவியை காங்கிரஸ் கட்சி ஏற்கட்டும் என்று விட்டுக்கொடுத்தார். ஆனால் இதற்குப் பதிலாக ஒரு அமைச்சரவை இடம் வேண்டும் என்றார். இது பிரச்சினையைத் தீர்த்தது.

முதல்வர் உத்தவ் தாக்கரே எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றினார். அதன் பிறகு 6 மாதங்களுக்கு எந்த கூச்சலும் இல்லை.

உத்தவ் தாக்கரேவுக்கு பதவி ஆசை கிடையாது. கடைசியில் அரசியல் என்பது அதிகாரத்துக்கானதுதான், அதிகாரம் வேண்டாம் என்று யாரும் கூறுவதில்லை. ஆனால் பதவிக்காக எதையும் செய்பவர் அல்ல உத்தவ் தாக்கரே. ஒவ்வொருவருக்கும் அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது, சிவசேனா இதில் பல தியாகங்களைச் செய்துள்ளது. பழைய கட்டில் என்ன சப்தம் வேண்டுமானாலும் போடட்டும், யாரும் கவலைப்பட போவதில்லை. இதுதான் இன்று கூறப்பட வேண்டியது.

இவ்வாறு சாம்னாவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x