ஜம்மு காஷ்மீர் என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: பாதுகாப்புப்படையினர் அதிரடி

சோபியான் மாவட்டம் துர்க்வாம் பகுதியில் முகாமிட்டு தேடுதலில் உள்ள பாதுகாப்புப்படையினர் : படம் ஏஎன்ஐ
சோபியான் மாவட்டம் துர்க்வாம் பகுதியில் முகாமிட்டு தேடுதலில் உள்ள பாதுகாப்புப்படையினர் : படம் ஏஎன்ஐ
Updated on
2 min read

ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் இன்று அதிகாலை தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

தெற்கு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள துருக்வாங்கம் பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து 44 ராஷ்ட்ரிய ரைபிள், தீவிரவாதி ஒழிப்பு சிறப்பு அதிரடிப்படை, சிஆர்பிஎப் 178 பட்டாலியன் பிரிவு ஆகியவை இணைந்து இன்று அதிகாலை அந்தப்பகுதியை சுற்றி வளைத்தனர்.

பாதுகாப்புப் படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதை அறிந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தினர்,இதற்கு பாதுகாப்புப் படையினர் தரப்பிலும் பதிலடி தரப்பட்டது.

இருதரப்பிலும் நீண்டநேரம் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று பாதுகாப்புப்படையினர் தரப்பில் தெரிவிக்கிக்கப்படுகிறது. தேடுதல் பணிகள் இன்னும் தொடர்ந்து நடந்து வருகின்றன. கொல்லப்பட்ட தீவிரவாதிகள் எந்த தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. தீவிரவாதிகளிடம் இருந்து தானியங்கி துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், கைதுப்பாக்கிகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்

இதுகுறித்து காஷ்மீர் மண்டல போலீஸார் ட்விட்டரில் இன்று காலை பதிவிட்ட கருத்தில் “ ஷோபியானின் துர்க்வாங்கம் பகுதியில் இன்று காலை நடந்த தேடுதல் பணியில் அடையாளம் தெரியாத 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தேடுதல் நடந்து வருகிறது, தீவிரவாதிகள் குறித்த விவரம் விரைவில் தெரிவிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது

இதற்கிடையே கொல்லப்பட்ட தீவிரவாதிகள் பெயர் ஜாபர் அகமது, கம்ரான் ஜாஹூர், முனாப் உல் இஸ்லாம் என்று பாதுகாப்புப்படையினர் தரப்பில் தெரிவி்க்கப்பட்டது.

ஷோபியான் மாவட்டத்தில் கடந்த ஒருவாரத்தில் நடக்கும் 4-வது என்கவுன்ட்டர் இதுவாகும். கடந்த 10ம் தேதி 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடப்பதற்கு முதல்நாளில் இரு என்கவுன்ட்டரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் 9 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த சனிக்கிழமை குல்காம் மாவட்டத்தில் நடந்த தேடுதல் வேட்டையில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி இருவர் பாதுகாப்புப்படையினரால் கொல்லப்பட்டனர்.

கடந்த இரு வாரங்களில் குறைந்தபட்சம் 6 முக்கிய கமாண்டர்கள் உள்பட 22 தீவிரவாதிகளை பாதுகாப்புப்படையினர் சுட்டுக் கொன்றுள்ளளனர் என ஜம்மு காஷ்மீர் போலீஸ் டிஜிபி தில்பாக் சிங் கடந்த வாரம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in