

என். மகேஷ்குமார்
ஆந்திராவில் காளஹஸ்தி கோயிலில் நேற்று முதல் பக்தர்கள்தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். அதேநேரம் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் பணியாற்றும் ஊர்க்காவல் படைவீரருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் கோயில் மூடப்பட்டது.
மத்திய அரசின் 5-ம் கட்ட ஊரடங்கு தளர்வில் அறிவித்தபடி, கடந்த 8-ம் தேதி முதல் ஆந்திர மாநிலத்தில் பல கோயில்கள் திறக்கப்பட்டன. திருப்பதி ஏழுமலையான் கோயிலிலும் கூட8-ம்தேதி முதல் அதன் ஊழியர்களுக்கு சோதனை அடிப்படையில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது. ஆனால், வாயுத்தலமாக விளங்கும் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் அர்ச்சகருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், முதல் நாளிளேயே கோயில் நடை சாத்தப்பட்டது.
அதன் பிறகு ஊழியர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. கிருமிநாசினி மருந்துகளை தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று முதல் காளஹஸ்தி சிவன் கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளியுடன் வரிசையாக சென்ற பக்தர்கள் காளத்திநாதரையும், ஞான பூங்கோதை தாயாரையும் தரிசித்தனர். ஆனால், இக்கோயிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜைகளை மட்டும் தேவஸ்தான அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 8-ம் தேதிமுதல் சித்தூர் அருகே உள்ள காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் திறக்கப்பட்டது. ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். இதனிடையே, அங்கு பணியாற்றும் ஊர்காவல் படையைச் சேர்ந்தஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், நேற்றுமுதல் இக்கோயில் அடைக்கப்பட்டது. கோயில் முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்த பின்னர் ஓரிரு நாட்களில் கோயில் மீண்டும் திறக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.