

கேரளத்தில் இன்று கரோனா தொற்று 82 பேர் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநிலச் சுகாதார அமைச்சர் கே.ஷைலஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
’’ இன்று கரோனா சோதனையில் எர்ணாகுளம் மாவட்டத்தில் 13 பேர், பத்தினம்திட்டா மாவட்டத்தில் 11 பேர், கோட்டயம் மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் தலா 10 பேர், பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேர், மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் தலா 6 பேர், ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர், கொல்லம் மாவட்டத்தில் நான்கு பேர், திருச்சூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் தலா 3 பேர், இடுக்கி மாவட்டத்தில் 2 பேர், திருவனந்தபுரம் மற்றும் வயநாடு மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவர் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் ஆவர்.
ஜூன் 12-ம் தேதி இறந்த திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 67 வயதான ரமேஷன் என்பவரும் இதில் அடங்குவார். இதய நோயாளியான இவர், நாள்பட்ட நுரையீரல் நோய்க்கான சிகிச்சையிலும் இருந்துள்ளார்.
இன்று நோய் கண்டறியப்பட்டவர்களில் 49 பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தவர்கள் ஆவர் (யுஏஇ -19, குவைத் -12, சவுதி அரேபியா -9, கத்தார் -5, ஓமான் -2, நைஜீரியா -2). பிற மாநிலங்களிலிருந்து வந்த 23 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது (மகாராஷ்டிரா -13, தமிழ்நாடு - 4, டெல்லி - 3, ராஜஸ்தான் -1, மேற்கு வங்கம் -1 மற்றும் தெலங்கானா -1). முதன்மைத் தொடர்பு மூலம் 9 பேர், கோட்டயம், பாலக்காடு, ஆலப்புழா மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் தலா 2 பேர், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 73 நோயாளிகளின் சோதனை முடிவுகள் இன்று எதிர்மறையாக (நெகடிவ்) இருந்தன. கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த 21 நோயாளிகள், பாலக்காடு மாவட்டத்தில் 12 பேர், கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 பேர், மலப்புரம் மாவட்டத்தில் 10 பேர், திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர், கோழிக்கோடு மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் தலா 4 பேர், திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் மற்றும் எர்ணாகுளம் மாவட்டத்தில் 2 நோயாளிகள் இதில் அடங்குவர்.
தற்போது வரை, 1,174 நோயாளிகள் கரோனா சிகிச்சையில் குணமாகி மீண்டு வந்துள்ளனர், 1,348 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
1,29,971 நபர்கள் தங்களது 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளதால், தனிமைப்படுத்தலின் கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
தற்போது, பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 1,20,727 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில், 1,18,704 பேர் தங்கள் வீடுகளில் அல்லது தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் கண்காணிப்பில் உள்ளனர், 2,023 பேர் மருத்துவமனைகளில் தனிமையில் உள்ளனர். 219 பேர் இன்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில், 4,491 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை, 1,14,753 நபர்களின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டு 1,996 மாதிரிகளின் முடிவுகள் வெளிவரக் காத்திருக்கின்றன. இது தவிர, சென்டினல் கண்காணிப்பின் ஒரு பகுதியாக உயர் பொது வெளிப்பாட்டுக் குழுக்களிடமிருந்து 31,424 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அவற்றில் 29,991 மாதிரிகள் எதிர்மறையானவை. மொத்தம் 1,51,686 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
தற்போது, கேரளத்தில் 125 ஹாட்-ஸ்பாட்கள் உள்ளன. இன்று ஹாட்-ஸ்பாட்களாக ஐந்து புதிய இடங்கள் அறிவிக்கப்பட்டன. காசர்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் தலா ஒரு இடமும், திருச்சூர் மாவட்டத்தில் மூன்று இடங்களும் புதிய ஹாட்ஸ்பாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இரண்டு இடங்கள் அப்பட்டியலில் இருந்து விலக்கப்பட்டுள்ளன’’.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.