

கடந்த மார்ச் மாதத்துக்குப் பின் மும்பையில் புறநகர் ரயில் சேவை அத்தியாவசியப் பணியாளர்களுக்காக இன்று தொடங்கப்பட்டுள்ளது. மத்திய ரயில்வே, மேற்கு ரயில்வே மண்டலங்கள் புறநகர ரயில்களை இயக்குகின்றன.
மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருக்கும் நிலையில் முன்களப்பணியாளர்கள், அத்தியாவசியப் பணியில் உள்ள அதிகாரிகள், ஊழியர்கள், அரசு ஊழியர்கள் அலுவலகத்துக்கு வர முடியாமல் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
லாக்டவுன் காலம் முடிந்தபின்பும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டும் புறநகர் ரயில்வே தொடங்கப்படாதது அத்தியாவசியப் பணியில் இருப்போருக்கு பெரும் சிரமத்தை அளித்து வந்தது. இதனால் அத்தியாவசியப் பணியாளர்கள் வருகைக்காக புறநகர் ரயில்களைக் குறைந்த அளவில் இயக்க வேண்டும் என முதல்வர் உத்தவ் தாக்கரே மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தக் கோரிக்கையை ஏற்று இன்று முதல் மத்திய ரயில்வே, மேற்கு ரயில்வே புறநகர் ரயில் சேவையைத் தொடங்கியுள்ளன. இந்த ரயில்கள் மகாராஷ்டிர அரசின் அத்தியாவசியப் பணியில் உள்ளவர்கள் மட்டுமே பயணிக்க வேண்டும், முறையான அடையாள அட்டை, டிக்கெட்டுகளை வைத்திருக்க வேண்டும் என்று ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.
1200 பேர் அமரக்கூடிய ரயில் 700 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ரயில்களில் பயணிப்போர் அனைவரும் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை இயக்கப்பட்டதால் 1.25 லட்சம் மாநில அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.
மத்திய ரயில்வே, மேற்கு ரயில்வே இணைந்து 450 ரயில்களை இயக்க உள்ளன. மேற்கு ரயில்வே 12 பெட்டிகள் கொண்ட 120 ரயில்களை சர்ச்கேட் முதல் தஹானு சாலை வரை இயக்குகிறது.
மத்திய ரயில்வே 200 ரயில்களை இயக்குகிறது. இந்த ரயில்கள் மும்பை சிஎஸ்டி முதல் தானே, கல்யான், கர்ஜாட், கசாரா வரையிலும், துறைமுகம், பன்வேல், சிஎஸ்டி வரை தனியாக 70 ரயில்களும் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்கள் காலை 5.30 மணி முதல் இரவு 23.30 மணி வரை 15 நிமிடங்கள் இடைவெளியில் இயக்கப்படும் என மேற்கு, மத்திய ரயில்வே அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்றைய நிலவரப்படி கரோனாவால் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 958 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3ஆயிரத்து 950 பேர் பலியாகியுள்ளனர். மும்பையில் மட்டும் 58,135 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,190 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது