Last Updated : 15 Jun, 2020 09:06 AM

 

Published : 15 Jun 2020 09:06 AM
Last Updated : 15 Jun 2020 09:06 AM

சீனா, பாகிஸ்தானின் ஒரு அங்குல நிலம்கூட இந்தியாவுக்குத் தேவையில்லை: அமைதியும் நட்பும்தான் தேவை: நிதின் கட்கரி பேச்சு

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி : கோப்புப்படம்

அகமதாபாத்

சீனா, பாகிஸ்தானின் ஒரு அங்குல நிலம் கூட இந்தியாவுக்குத் தேவையில்லை. அதற்கு ஆசைப்படவும் இல்லை. இந்தியாவுக்கு அண்டை நாடுகளிடம் அமைதியும், நட்புறவும் மட்டுமே தேவை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

இந்தியா, சீனா இடையே எல்லையில் பதற்றமான சூழல் நிலவி, அது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வரும்போது, இந்தக் கருத்தை மத்திய அமைச்சர் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2-வது முறையாக பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து பாஜக சார்பில் ஜன் சம்வாத் கூட்டம் நடந்து வருகிறது. குஜராத் பாஜக தொண்டர்கள் மத்தியில் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று நாக்பூரில் இருந்தவாறு காணொலி மூலம் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

''பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி 2-வது முறையாக பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்த ஆட்சியில் மிகப்பெரிய சாதனை நாட்டில் அமைதியை நிலைநாட்டி, தீவிரவாதிகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கி உள்நாட்டுப் பாதுகாப்பை பலப்படுத்தியதும், எல்லைப் பகுதியை வலுப்படுத்தியதுதான்.

நாட்டில் தலைதூக்கி வந்த மாவோயிஸ்டுகள் பிரச்சினையைத் தீர்த்து உள்நாட்டுப் பாதுகாப்பை மோடி அரசு வலுப்படுத்தியது. அதோடு பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத செயல்களையும் கட்டுப்படுத்தியது. நமது எல்லையில் ஒருபுறம் சீனா, பாகிஸ்தான் இருந்தாலும், நமக்குத் தேவை அமைதியும், வன்முறையில்லாத சூழலும்தான்.

இந்தியா எப்போதும் தனது எல்லையை விரிவுபடுத்திக்கொண்டு தன்னை வலிமையானதாகக் காட்டிக்கொள்ளாது. இந்தியாவுக்குத் தேவை வலிமையான அமைதியான சூழல்தான். பூடான், சீனா, பாகிஸ்தான், நேபாளம் ஆகியவற்றின் ஒரு அங்குல நிலத்தைக்கூட இந்தியா விரும்பியதில்லை. தேவையும்இல்லை.

வங்கதேசப் போரின் போதுகூட, போரில் வென்றபின், அந்நாட்டின் பிரதமராக முஜிபுர் ரஹ்மானை அமரவைத்துவிட்டு இந்திய ராணுவம் திரும்பிவந்துவிட்டதே தவிர அந்நாட்டைக் கைப்பற்றவில்லை.

அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா ஆகியவற்றின் ஒரு இன்ச் நிலம்கூட நமக்கு வேண்டாம். நமக்குத் தேவை அன்பு, அமைதி, நட்பு, பிராந்திய நாடுகளுடன் சேர்ந்து பணியாற்றுதல்தான்.

கரோனா வைரஸ் பிரச்சினை நீண்ட நாட்கள் நீடிக்காது. நாம் கரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரமாக இருக்கிறோம். எனக்குக் கிடைத்த தகவலின்படி, விரைவாக தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துவிடுவோம் என நம்புகிறேன். எதிர்மறையான சிந்தனைகளை விட்டுவிட்டு தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கரோனாவுக்கு எதிரான போரில் வெல்ல வேண்டும்''.

இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x