

தலைநகர் டெல்லியின் நிலைமை கரோனாவால் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. டெல்லியில் கரோனா வைரஸ் பரவல் இதற்கு முன் இருந்ததைவிட வேகமெடுத்து, கடந்த 6 நாட்களில் 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளது டெல்லி அரசுக்கு எச்சரிக்கை மணியாக ஒலித்துள்ளதால் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
டெல்லியில் 4-வது லாக்டவுன் தளர்வுக்குப் பின் மக்கள் சுதந்திரமாக நடமாடத் தொடங்கியபின் அங்கு கரோனா வைரஸ் பரவல் வேகம் தீவிரமடைந்துள்ளது.
குறிப்பாக மே 28-ம் தேதியிலிருந்து நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதில் அதிகபட்சமாக கடந்த வாரம் முதல் முறையாக 2 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டனர்.
உயிரிழப்புகளும் கடந்த மே மாதத்தில் நாள்தோறும் 5 என்ற எண்ணிக்கைக்குள் இருந்த நிலையில் கடந்த 10 நாட்களாக நாள்தோறும் 30-க்கும் அதிதமாகச் சென்று வருகிறது. இதனால் கடந்த 10 நாட்களில் டெல்லியில் உயிரிழப்பு அதிகரித்து 1,200க்கும் மேலாகச் சென்றுள்ளது.
அதுமட்டுமல்லாமல் கரோனா வைரஸிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அளவு டெல்லியில் படிப்படியாக் குறைந்து வருகிறது. கடந்த மே மாதத்தில் 48 சதவீதத்துக்கு மேல் இருந்த நிலையில் இப்போது 39 சதவீதத்துக்கும் கீழ் வந்துவிட்டது.
குறிப்பாக கடந்த 6 நாட்ளில் கரோனா வைரஸ் பரவல் வேகம் அதிகரித்து 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருப்பது டெல்லி மக்களை மட்டுமல்லாமல், டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசையும் உலுக்கியிருக்கிறது.
ஏனென்றால் டெல்லியில் கடந்த மார்ச் 1-ம் தேதிதான் முதல் கரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார். இத்தாலி சென்று திரும்பிய ஒரு வர்த்தகருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன்பின் 79 நாட்களுக்குப் பின் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தொட்டது.
இதன்பின் டெல்லி அரசின் மெத்தனமான நடவடிக்கையா அல்லது கட்டுப்பாடுகளில் தளர்வா எனத் தெரியவில்லை. கரோன பரவல் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது. 10 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரத்தை எட்டுவதற்கு 13 நாட்களும், 20 ஆயிரம் கரோனா எண்ணிக்கையிலிருந்து 30 ஆயிரத்தை எட்ட 8 நாட்களும், 30 ஆயிரத்திலிருந்து தற்போது 40 ஆயிரத்தை வெறும் 6 நாட்களில் எட்டியது எச்சரிக்கை மணியாக ஆளும் அரசுக்கு ஒலித்துள்ளது.
கடந்த 9-ம் தேதி 30 ஆயிரத்தைக் கடந்த டெல்லியின் கரோனா எண்ணிக்கை நேற்று 40 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த சனிக்கிழமை மட்டும் அதிகபட்சமாக, 2,138 பேர் பாதிக்கப்பட்டனர். இதற்கு முன் அதிகபட்சமாக கடந்த 11-ம் தேதி 1,877 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதை சனிக்கிழமை நிலவரம் முறியடித்தது.
டெல்லியில் மார்ச் 1-ம் தேதி முதல் கரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டு அதன்பின் மே 18-ம் தேதி அங்கு 10 ஆயிரம் எண்ணிக்கையைத் தொட்டது. சராசரியாக 127 பேர் மட்டுமே நாள்தோறும் பாதிக்கப்பட்டனர். அடுத்த 13 நட்களில் 19,844 பேர் பாதிக்கப்பட்டனர். மே 18-ம் தேதி வரை 160 பேர் மட்டுமே பலியான நிலையில் மே 31-ம் தேதிக்குள் 3 மடங்கு அதிகரித்து 473 ஆக அதிகரித்தது.
டெல்லியில் தற்போது கரோனா எண்ணிக்கை இரட்டிப்பாக 14 நாட்கள் எடுத்து வருவதாக டெல்லி அரசு கூறி வருகிறது. இந்த நாட்கள் குறையும் பட்சத்தில் டெல்லியில் நிலைமை மோசமாகக்கூடும். 14 நாட்கள் என இருக்கும்போதே அடுத்த இரு வாரங்களில் 56 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவார்கள் என டெல்லி அரசு கணித்துள்ளது. இந்த நாட்கள் குறைந்தால், டெல்லி நாட்டின் தலைநகர் மட்டுமல்ல கரோனாவின் தலைநகராகவும் மாறக்கூடும்.
டெல்லியில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா வைரஸ் மாநில மக்களைப் பெரும் அச்சத்துக்கு ஆளாக்கியுள்ளது. இதுவரை நிலைமையின் தீவிரத்தைப் புரியாத டெல்லி அரசுக்கும் இந்த எண்ணிக்கை எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது.
இருப்பினும், ஜூலை மாத இறுதிக்குள் டெல்லியில் கரோனாவால் 5.50 லட்சம் பாதிக்கப்படுவார்கள் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது. இதை எவ்வாறு தடுக்கப்போகிறார்கள் என்பது அடுத்து வரும் நாட்களில் அரசு நடவடிக்கையின் மூலமே தெரியவரும்.