Published : 15 Jun 2020 07:08 AM
Last Updated : 15 Jun 2020 07:08 AM

கரோனா பற்றிய பொய் தகவல்களை முறியடிக்க ஐ.நா.வில் இந்தியா உட்பட 13 நாடுகள் தீவிரம்

கரோனா வைரஸ் தொற்று பற்றி பொய்யான தகவல்கள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன. இதற்கு தீர்வு காண இந்தியா உள்ளிட்ட 13 நாடுகள் தீவிரமாக உள்ளன.

இதுதொடர்பாக இந்தியா,பிரான்ஸ், இந்தோனேசியா,நார்வே, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 13 நாடுகள் தரப்பில் வெளியிட்ட அறிக்கைக்கு, 132 ஐ.நா. உறுப்பு நாடுகள் ஒப்புதல் வழங்கியுள்ளன.

வைரஸ் தொடர்பாக பரப்பப்படும் பொய் தகவல்களை முறியடிக்க ஐ.நா. சபை ‘வெரிபைடு' என்ற புது தளத்தை கடந்த மாதம்தொடங்கியது. இந்த தளம் மூலம்துல்லியமான தகவல்கள் தெரிவிக்கப்படும். பொய் தகவல் பரப்பப்படுவதால் கரோனா வைரஸ் தொற்றுக்கு தீர்வு காண்பதும் சிகிச்சை அளிப்பதும் சிக்கல் மிக்கதாகிறது என்று ஐ.நா. தெரிவித்துள்ளது

ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ குத்தேரஸ் இது தொடர்பாக கூறும்போது, ‘‘கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த உலகம் கடுமையாக போராடுகிறது. இவற்றுக்கு இடையில் கரோனா வைரஸ் பற்றி உண்மை,பொய் கலந்த தகவல் பரப்பப்படுகிறது. தவறான மருத்துவ ஆலோசனைகளும், வெறுப்பு தரும் பேச்சுகளும் வெளியிடப்படுகின்றன. இணையதளங்கள், செயலிகள் உள்ளிட்டவை மூலம் திட்டமிட்டுஇவை பரப்பப்படுகின்றன. இதற்கான தீர்வு, அறிவியல் ரீதியில்நிரூபிக்கப்பட்ட தகவல்களை மக்களுக்கு பகிர்வதுதான்’’ என்றார்.

‘வெரிபைடு' தளத்தில் இணைந்து உண்மை தகவல்களை பரப்பும் தன்னார்வலர்களாக மக்கள் தொண்டாற்ற வேண்டும் என்று ஐ.நா. கோரியுள்ளது. ஐ.நா.வின் இந்த முயற்சிக்கு ஐ.நா.வுக்கான இந்திய தூதர் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தியா உள்ளிட்ட 13 நாடுகள் தரப்பில் இந்த பிராந்தியம் முழுமைக்குமாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா வைரஸ் தொற்று எப்படி கொடியதோ அதேபோன்று தீங்கிழைக்கக் கூடியது பொய்தகவல்களை பரப்புவது. பொய் தகவல்கள் மக்களின் சுகாதாரத்துக்கும் பாதுகாப்புக்கும் ஆபத்து விளைவிக்கக் கூடியவை. கரோனா வைரஸ் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. பொய் தகவல்கள், வதந்திகள் பரவுவதற்கான சூழலையும் அது ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. வைரஸை காரணமாக்கி வீடியோக்களில் மாற்றம் செய்து வகுப்பு மோதல், வன்முறையை தூண்டுவதற்கான சூழலும் உருவாக்கப்படுகிறது. இவற்றை எதிர்கொள்ள உலக நாடுகள் அவசரம் காட்ட வேண்டும்.

பொய் தகவல் பரப்புவதை உடனடியாக நிறுத்துவதும் இந்தபிரச்சினையை சமாளிக்க ஐ.நா. வெளியிட்டுள்ள பரிந்துரைகளை பின்பற்றுவதும் அனைவரின் கடமையாகும். மக்களுக்கு நம்பகத்தன்மை மிக்க வட்டாரங்கள் மூலமாக வைரஸ் பற்றி துல்லியமான தகவல்கள் போய்ச் சேர வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x