Published : 15 Jun 2020 07:05 AM
Last Updated : 15 Jun 2020 07:05 AM

ஒடிசாவில் வங்கியிலிருந்து ரூ.1,500 உதவித்தொகை பெற 100 வயது தாயை கட்டிலுடன் இழுத்துச் சென்ற மகள்

ஒடிசாவின் நோபடா மாவட்டத்தில் வங்கியிலிருந்து ரூ.1,500 உதவித்தொகை பெற 100 வயது தாய் லாபே பாகெலை கட்டிலுடன் இழுத்துச் சென்ற மகள் குஞ்சா.

புவனேஸ்வர்

ஒடிசாவின் நோபடா மாவட்டம், பாரகன் கிராமத்தைச் சேர்ந்தவர் லாபே பாகெல். நூறு வயதாகும் இந்த பெண், முதுமை காரணமாக படுத்த படுக்கையாக உள்ளார். கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல் செய்யப்பட்ட போது ஜன் தன் வங்கிக் கணக்கு வைத்துள்ள ஏழை பெண்களுக்கு 3 மாதங்களுக்கு தலா ரூ.500 உதவித் தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

இதன்படி லாபே பாகெலின் ஜன் தன் வங்கிக் கணக்கில் மத்திய அரசு சார்பில் ரூ.1,500 பணம் செலுத்தப்பட்டது. அவரால் எழுந்து நடக்க முடியாததால் அவரது 70 வயது மகள் குஞ்சா, வங்கிக்கு சென்று பணத்தை எடுக்க முயன்றார். அங்கிருந்த வங்கி அலுவலர் அஜித் பரதன், பயனாளியை நேரில் பார்த்தால் மட்டுமே பணம் வழங்குவேன் என்று கூறியுள்ளார்.

வேறு வழியில்லாத குஞ்சா, கடந்த 11-ம் தேதி தனது தாய் லாபே பாகெலை கட்டிலுடன் வங்கிக்கு இழுத்துச் சென்றார். அவரது வீட்டில் இருந்து வங்கிஅலுவலகம் 400 மீட்டர் தொலைவில் உள்ளது. உதவிக்கு வேறு யாரும் முன்வராத நிலையில் 100 வயது தாயை அவரே கட்டிலில் மெதுவாக இழுத்துச் சென்றார். இருவரின் நிலைமையை நேரில் பார்த்த வங்கி அதிகாரி அஜித் பரதன், உடனடியாக ரூ.1,500 பணத்தை வழங்கினார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மதுஸ்மிதா சாஹு கூறும்போது, "குஞ்சாவின் வீட்டுக்கு நேரில் வருவதாக வங்கி அலுவலர் உறுதி அளித்துள்ளார். அதற்குள் அந்த பெண், தனது தாயை அழைத்துச் சென்றிருக்கிறார்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x