

பிரதமர் நரேந்திர மோடி தனது 7 நாட்கள் வெளிநாட்டு பயணமாக முதலில் அயர்லாந்து தலைநகர் டப்ளின் வந்தடைந்தார். அவருக்கு அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் 7 நாட்கள் சுற்றுப் பயணம் செய்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து புறப்பட்டு டப்ளின் வந்தடைந்தார். டப்ளின் நகரில் இறங்கியவுடன் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, ‘‘இந்தியாவில் இருந்து அயர்லாந்து... இருநாடுகளுக்கு இடையில் வலுவான உறவு, சிறந்த ஒத்துழைப்பு’’ என்று பதிவிட்டார்.
இந்தப் பயணத்தின் போது அயர்லாந்து பிரதமர் என்டா கென்னியை சந்தித்து பல்வேறு துறைகளில் இருநாட்டு ஒத்துழைப்பு குறித்து மோடி ஆலோசனை நடத்துகிறார். அங்குள்ள இந்திய வம்சாவளி மக்களையும் டபுள் டிரீ ஹில்டன் ஓட்டலில் சந்தித்து பேசுகிறார்.
அயர்லாந்து பயணம் குறித்து மோடி தனது முகநூலில் கூறுகையில், ‘‘அயர்லாந்து பயணத்தின் மூலம் இரு நாட்டு மக்கள் பரஸ்பரம் பொருளாதார ரீதியாக ஒத்துழைப்பு ஏற்படுத்தி கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியா - அயர்லாந்து இடையில் வர்த்தக உறவை அதிகரிக்க செய்ய முக்கிய ஆலோசனை நடத்துகிறார் மோடி.
அயர்லாந்தில் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் வாழ்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் சுகாதாரத் துறையில் மருத்துவர்கள், செவிலியர்களாக பணியாற்றுகின்றனர். கடந்த 1956-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அயர்லாந்து பயணம் மேற்கொண்டார். கடந்த 60 ஆண்டுகளுக்குப் பிறகு அயர்லாந்து செல்லும் முதல் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா பயணம்
அயர்லாந்து பயணத்தை முடித்து கொண்டு அமெரிக்கா செல்கிறார் மோடி. நியூயார்க்கில் ஐ.நா மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுகிறார். அமெரிக்க அதிபர் ஏற்பாடு செய்துள்ள அமைதி மாநாட்டிலும் மோடி பங்கேற்கிறார். மேலும், பல்வேறு உலக நாட்டு தலைவர்களைச் சந்தித்து மோடி பேசுகிறார். பிரபல முதலீட்டாளர்கள், வர்த்தகர்களையும் மோடி சந்தித்து இந்தியாவில் முதலீடு வர்த்தகம் குறித்து விரிவாக ஆலோனை நடத்துகிறார். இந்த சந்திப்பில் 500 பிரபல நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனது அமெரிக்க பயணத்தின் போது, முகநூல் அலுவலகத்துக்கு செல்கிறார் மோடி. அங்கு முகநூல் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்க்கை சந்திக்கிறார். அத்துடன் கூகுள், டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனங்களையும் பார்வையிடுகிறார்.
அமெரிக்க பயணம் குறித்து மோடி கூறுகையில், ‘‘இந்த பயணம் இரு நாட்டு உறவை மேலும் வலுப்பெற செயயும். ஐ.நா. நிறுவனப்பட்டு 70-வது ஆண்டு கொண்டாடப்படும் வேளையில், நான் அமெரிக்க பயணம் மேற்கொள்வது வரலாற்று சிறப்புமிக்கதாக அமையும்’’ என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க பயணத்தை முடித்து கொண்டு வரும் 29ம் தேதி மோடி இந்தியா திரும்புகிறார்.