

கரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்து கண்டுபிடித்துள்ளதாக பதஞ்சலி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆச்சார்யா பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்புக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆயுர்வேத மருந்து கண்டுபிடித்துள்ளதாக பதஞ்சலி ஆயுர்வேதா லிமிட்டெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆச்சார்யா பாலகிருஷ்ணா கூறியுள்ளார்.
கரோனா பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேலான நோயாளிகளுக்கு இந்த ஆயுர்வேத மருந்தைக் கொடுத்து பரிசோதனை செய்ததாகவும், அவர்கள் அனைவரும் 100 சதவீதம் நோயில் இருந்து குணம் அடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நோய் தொற்று இருப்போர் இந்த ஆயுர்வேத மருந்தை எடுத்துக் கொண்டதன் மூலம் 5முதல் 14 நாட்கள் என்ற அளவில்குணமடைந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஆச்சார்யா பாலகிருஷ்ணா கூறும்போது, “கரோனா வைரஸ் பரவ தொடங்கியதுமே இதற்கு மருந்து கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்களை அமர்த்தினோம். முதலில் சிமுலேஷன் செய்யப்பட்டது. பின்னர் கரோனா வைரஸை தாக்கி அழிக்கக் கூடியகாம்பவுண்ட் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இந்த மருந்தை நூற்றுக்கும் மேலான கரோனா நோயாளிகளுக்குக் கொடுத்து பரிசோதித்தோம். அவர்கள் இந்த மருந்தின் மூலம் 100 சதவீதம் குணமடைந்தனர். எனவே, கரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆயுர்வேத மருந்து பலனளிக்கும் என்பதை நிச்சயமாக எங்களால் சொல்ல முடியும்” என்று கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பானது பல நிலைகளில் உள்ளது.அஸ்ட்ராசெனகா, ஃபைசர், ஜான்சன் அண்ட் ஜான்சன், மெர்க்,மாடர்னா, சனோஃபி மற்றும் சீனாவின் கன்சினோ பயாலஜிக் ஆகிய நிறுவனங்கள் தாங்கள் கண்டுபிடித்துள்ள மருந்தை கரோனா நோயாளிகளுக்குக் கொடுத்து பரிசோதித்து வருகின்றனர்.
அதேசமயம் மகாராஷ்டிர அரசு ஆர்செனிக் ஆல்பம் 30 என்ற ஹோமியோபதி மருந்தை கரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.