

வேலையில்லாத் திண்டாட்டத்தின் உச்சகட்டம் என்ன என்பதற்கான விடை உத்திரபிரதேச மாநிலத்திலிருந்து கிடைத்துள்ளது.
மாநில தலைமைச் செயலகத்தில் பியூன் வேலைகளுக்கான 368 காலியிடங்களுக்கு 23 லட்சம் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
பியூன் வேலைக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் செய்ய நிர்வாகம் உத்தரவு பிறப்பிருந்தது.
அதாவது லக்னோவின் மக்கள் தொகை 45 லட்சம். பியூன் வேலைக்கு 368 காலியிடங்களுக்குக் குவிந்த விண்ணப்பங்களோ 23 லட்சம்!! இதில் மேலும் கொடுமை என்னவெனில் 2 லட்சம் விண்ணப்பதாரர்கள் குறைந்தது பி.டெக், பி.எஸ்.சி, எம்.எஸ்.சி மற்றும் எம்.காம் பட்டம் பெற்றவர்கள்.
மேலும் கொடூரமான விவகாரம் 255 விண்ணப்பதாரர்கள் பி.எச்.டி முடித்தவர்கள்.
இந்த எண்ணிக்கைகளை பணி நியமனம் செய்யும் சச்சிவாலய நிர்வாகம் அளித்துள்ளது. நிர்வாகமே தற்போது குவிந்துள்ள விண்ணப்பங்கள், அதன் கல்வித் தகுதி ஆகியவற்றை பார்த்து அதிர்ச்சியில் உறைந்துள்ளது. நேர்முகத் தேர்வின் மூலம் நியமிக்கப்படவுள்ளதால் சுமார் 2 ஆண்டுகள் பியூன் பணி நியமனம் நடைபெறும் என்று தெரிகிறது.
வேலையில்லாமல் சுற்றுவதை விட பியூன் வேலை சிறந்தது என்று பி.எச்.டி முடித்த அலோக் என்பவர் வேதனையுடன் தெரிவித்தார்.
ரத்தன் யாதவ் என்ற பட்டதாரி கூறும்போது, “அடிமட்ட வேலையை பார்ப்பதில் ஒன்றும் தவறில்லை” என்றார். ரேகா வர்மா என்ற மற்றொரு பட்டதாரியோ, “அடுத்தவர்களை நம்பி காலந்தள்ளுவதை விட இது எவ்வளவோ மேல். வேலையில்லாமல் இருந்தால், நாம் நமது நண்பர்கள், உறவினர்களை நம்பியிருக்க வேண்டியுள்ளது. எத்தனை நாட்களுக்கு நமது நலம் விரும்பிகளின் கருணையை நம்பி வாழ்வது” என்று கேள்வி எழுப்பினார்.