

திருப்பதி பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளான நேற்று கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, இரவு இரு வேளைகளிலும் உற்சவமூர்த்தியான மலையப்ப சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வருகிறார்.
இந்நிலையில் பிரம்மோற்சவத் தின் முக்கிய வாகன சேவையாக கருதப்படும் கருட வாகன சேவை, 5-ம் நாளான நேற்று இரவு நடை பெற்றது. இதில் மூலவருக்கு அணிவிக்கப்படும் தங்கக் காசு மாலை மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருந்தது.
இரவு 8 மணிக்கு வாகன மண்டபத்தில் இருந்து திருவீதி உலா புறப்பட்டது. சுவாமியை காண நான்கு மாட வீதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். அவர்கள் சுவாமியை கண்டதும் ‘கோவிந்தா கோவிந்தா’ என விண்ணதிர முழக்கமிட்டு வழிபட்டனர்.
திருமலையில் நேற்று கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது பக்தர்கள் மதியம் முதலே திருமாட வீதிகளில் குவிந்தனர். புரட்டாசி மாதம் என்பதாலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும் எதிர்பார்த்ததை விட அதிக பக்தர்கள் இந்த சேவையில் கலந்துகொண்டனர். சுமார் 3 மணி நேரம் வரை வீதி உலா நடைபெற்றது. வாகன சேவையின் முன் குதிரை, யானை பரிவட்டங்கள் செல்ல, ஜீயர் குழுவினர், பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த நடனக் குழுவினர் பங்கேற்றனர்.
முன்னதாக நேற்று காலை, மோகினி அவதாரத்தில் மலையப்ப சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அலங்கார வெள்ளிப் பல்லக்கில் மோகினி அவதாரத்தில் பவனி வந்த மலையப்பருக்கு அருகிலேயே, மற்றொரு பல்லக்கில் கிருஷ்ணர் அவதாரத்திலும் உற்சவ மூர்த்தி பவனி வந்தார். நான்கு மாட வீதிகளிலும் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து சுவாமியை தரிசித்தனர்.