

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்யகடந்த 11-ம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டது. திருப்பதியில் உள்ள அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ், ஸ்ரீநிவாசம், விஷ்ணு நிவாசம் உட்பட 18 மையங்களில் தினமும் 3,000 இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகிறது.
மேலும், ஆன்லைன் மூலம்ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்களும் தினசரி 3,000 வீதம் வழங்கப்படுகிறது. இவை தவிர காலையில் நேரில் வரும் விஐபி பக்தர்களுக்கு ஒரு மணி நேரம் தரிசனத்துக்காக ஒதுக்கப்படுகிறது. இதில் 50 முதல் 60 விஐபி பக்தர்கள் மட்டுமே சுவாமியை தரிசித்து வருகின்றனர்.
டிக்கெட் அல்லது டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்பேதிருமலைக்கு செல்ல வேண்டும். அதன் பின்னர் அதில் குறிப்பிட்டுள்ள இடத்துக்கு சென்றவுடன், வரிசை தானாக சுவாமியை நோக்கி செல்கிறது. பின்னர் சுவாமியை ஜெயா, விஜயா துவார பாலகர்கள் அருகே நின்று தரிசிக்கலாம். எந்தவித தள்ளுமுள்ளும் இன்றி பெருமாளை 30 நிமிடங்களில் தரிசிக்க முடிவதால் பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
அதேநேம், ஆன்லைனில் அடுத்த மாதம் வரை ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்கள் தீர்ந்து போனதால் வெளி மாநில பக்தர்கள் வருந்துகின்றனர். இலவச டோக்கன்களும் வரும் 22-ம் தேதி வரை தீர்ந்து போனது. இதனால் திருப்பதிக்கு வரும் ஆந்திர வெளி மாவட்ட பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.