Last Updated : 03 Sep, 2015 07:52 AM

 

Published : 03 Sep 2015 07:52 AM
Last Updated : 03 Sep 2015 07:52 AM

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் வங்கிப் பணிகள் முடங்கின: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு; ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு

மத்திய தொழிற்சங்கங்கள் நேற்று நடத்திய நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தால் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.இந்த வேலை நிறுத்தத்தால், ரூ.25 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொழிலாளர் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங் களை வாபஸ் பெற வேண்டும், மாதம் ரூ.15 ஆயிரம் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க வேண்டும், அரசு வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது, பொதுத் துறை நிறுவன பங்குகளை விற்க கூடாது போன்ற 12 கோரிக்கைகளை மத்திய தொழிற்சங்கங்கள் முன்வைத்தன. கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தன.

இதையடுத்து, தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கடந்த மாதம் மத்திய அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், எந்த முடிவும் ஏற்படாததால், திட்டமிட்டபடி நேற்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடந்தது. இதில் 10 மத்திய தொழிற்சங்கங்களை சேர்ந்த 15 கோடி தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

மத்திய தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தலைவர்கள் கூறுகையில், ‘‘நாள் முழுவதும் நடத்தப்பட்ட வேலை நிறுத்த போராட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள், மாநிலங்களில் தனியார் தொழிற் சாலைகள் மூடப்பட்டன. இந்த வேலை நிறுத்தத்தில் போக்கு வரத்து சங்கங்கள், வர்த்தக சங்கங் களும் ஆதரவாக இருந்தன. இதனால் நாடு முழுவதும் பல மாநிலங்களில் பள்ளிகள் மூடப் பட்டன. மத்திய அரசு அலுவலகங் களில் குறைந்த எண்ணிக்கை யிலேயே ஊழியர்கள் காணப் பட்டனர்’’ என்று தெரிவித் தனர்.

இதுகுறித்து ஏஐடியுசி தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா கூறும்போது, ‘‘நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்துக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. இதற்கு முன்பு இப்படி ஒரு ஆதரவு இருந்ததில்லை. டெல்லியில் வேலை நிறுத்தத்தில் பாதிப்பை பார்க்கிறோம். இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை’’ என்றார்.

மேற்கு வங்கத்தில் வன்முறை

தொழிற்சங்கங்கள் நடத்திய வேலை நிறுத்தம் எந்தவித அசம்பா விதமும் இன்றி அமைதியாக நடந்தது. மேற்குவங்கத்தில் மட்டும் முர்ஷிதாபாத், ஹவுரா, வடக்கு 24 பர்கானாஸ் ஆகிய இடங்களில் இடதுசாரிகளுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையில் கை கலப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த போராட்டத்தில் வங்கி, காப்பீடு, கூட்டுறவு வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள் உட்பட அனைத்து வங்கிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தததால், பணி பரிவர்த்தனை முற்றிலும் முடங்கியது. நிதி தலைநகரான மும்பை, சென்னை, கொல்கத்தா, டெல்லி போன்ற முக்கிய நகரங்களில் பொது வேலை நிறுத்தம் மிகப் பெரிய வெற்றி அடைந்துள்ளது. இதில் 5 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர் என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் நேற்று சென்னையில் தெரிவித் தார்.

எனினும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இண்டியன் ஓவர்சீஸ் பேங்க் ஆகியவை பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை. பாஜக ஆதரவு சங்கங்களான பிஎம்எஸ் மற்றும் என்எப்ஐடியு ஆகியவையும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை.

டெல்லியில் ஆட்டோ ரிக் ஷாக்கள் முற்றிலும் ஓடவில்லை. ஆனால், மெட்ரோ ரயில் போக்குவரத்தில் பாதிப்பில்லை. கேரளாவில் மிகப்பெரிய ஐ.டி நிறுவனங்களில் குறைந்த எண்ணிக் கையிலேயே ஊழியர்கள் வந்திருந்தனர். துறைமுக பணி களும் பாதிக்கப்பட்டன. கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானாவிலும் பேருந்துகள் இயங்கவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் இதனால் சாலைகளில் தவித்தனர். இந்த மாநிலங்களிலும் தொழிற் சாலைகள், வங்கிகள் மூடப்பட்டி ருந்தன. இதேபோல் மத்தியப் பிரதேசம், பிஹார், திரிபுரா உட்பட பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பாஜக சார்பில் நரேந்திர மோடி பிரதமர் பதவியேற்று ஓராண்டு கழிந்த நிலையில், முதல் முறையாக நாடு தழுவிய போராட்டம் நடந்துள்ளது. இதனால் மத்திய அரசுக்கு நெருக்கடியும் அதிகரித்துள்ளது.

ரூ.25 ஆயிரம் கோடி நஷ்டம்

மத்திய தொழிற்சங்கங்கள் நடத்திய பொது வேலை நிறுத்தத்தால், நேற்று ஒரு நாள் மட்டும் ரூ.25 ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக அசோசெம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அசோசெம் பொதுச் செயலாளர் டி.எஸ்.ராவத் நேற்று கூறுகையில், ‘‘அடிப்படை சேவைகள், பண பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டதால், நேரடியாகவும் மறைமுகமாகவும் ரூ.25 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிரு க்கும். தொழிலாளர் துறையில் சீர்திருத்தங்கள் மிகவும் அவசியம். இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு எல்லோரும் ஏற்கத்தக்க தீர்வை காண வேண்டும். தொழிற்துறை மற்றும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு அரசு விரைந்து செயல்பட வேண்டும்’’ என்றார்.

தமிழகத்தில்..

தமிழகத்தில் மத்திய அரசின் எல்.ஐ.சி. அலுவலகம், வருமான வரித்துறை, கணக்காயர் அலுவ லகம், தபால் துறை, துறைமுகம், பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் வங்கிப் பணிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டன. அதேநேரம் பெரும்பாலான அரசு பேருந்துகள் ஓடின. சில தனியார் பேருந்துகள் மட்டும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றன. இந்த வேலைநிறுத்தத்தால் தமிழகத்தைப் பொருத்தவரை மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிய அளவுக்கு பாதிக்கப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x