பரோட்டாவுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி; சப்பாத்திக்கு 5%; வறுத்தெடுத்த நெட்டிசன்கள்: ஆனந்த் மகிந்திரா கண்டனம்

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
2 min read

சுவைதான் வெவ்வேறு, மாவு ஒன்றுதான். ஆனால் பரோட்டாவுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி, சப்பாத்தி, ரொட்டிக்கு 5 சதவீதம் மட்டும்தான் ஜிஎஸ்டி வரி என்ற உத்தரவால் நெட்டிசன்கள் கொந்தளித்துவிட்டனர்.

பேக்கிங் செய்து விற்கப்படும் சப்பாத்திக்கும், பரோட்டாவுக்கும் இருக்கும் வேறுபாடு என்னவென்றால், சப்பாத்தியை உடனடியாகச் சாப்பிடலாம். பரோட்டாவை சூடு செய்து சமைத்துச் சாப்பிட வேண்டும். இந்த அடிப்படை வேறுபாட்டை வைத்து வரி விதிக்கப்பட்டுள்ளது

பெங்களூரைச் சேர்ந்த ஐடி பிரஷ் எனும் தனியார் நிறுவனம் உடனடியாக சமைக்கும் (ரெடி டூ குக்) உணவுகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. பரோட்டா, சப்பாத்தி, மலபார் பரோட்டா, ரொட்டி, நான் வகைகள் போன்வற்றை விற்பனை செய்து வருகிறது.

ஆனால் ரொட்டி, சப்பாத்தி, நான் வகைகளுக்கு 5 சதவீதம் வரியும் பரோட்டாவுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியும் விதிப்பது குறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி தொடர்பான விவகாரங்களைக் கவனிக்கும் அதாரிட்டி ஆப் அட்வான்ஸ் ரூலிங் (ஏஏஆர்) அமைப்பிடம் முறையிட்டது.

''கோதுமை மாவில் செய்யும் ரொட்டி வகைகள் அனைத்துக்கும் ஒரே வரிவிதிப்பு இருக்க வேண்டும், கோதுமை பரோட்டாவுக்கு மட்டும் 18 சதவீதம், கோதுமை ரொட்டி, காக்ரா, நான் வகைகளுக்கு 5 சதவீதம் என்பதை எப்படி ஏற்பது என விளக்க வேண்டும்'' என்று ஐடி பிரஷ் எனும் தனியார் நிறுவனம் கோரியிருந்தது.

இதுகுறித்து விசாரித்த ஏஏஆர் அமைப்பு, ''பரோட்டா என்பது வேறு. சப்பாத்தி, ரொட்டி வேறு. சமைக்கப்பட்ட உணவுகளான ரொட்டி, நான், காக்ரா போன்வற்றை அப்படியே சாப்பிட முடியும். ஆனால், பரோட்டாவைச் சமைத்துதான் சாப்பிட முடியும். அதனால்தான் சமைக்கப்பட்ட உணவுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி, பரோட்டாவுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி என விளக்கம் அளித்தது.

இருப்பினும் இந்த விளக்கத்தால் அதிருப்தி அடைந்த அந்த தனியார் நிறுவனம் மேல்முறையீடு செய்யப் போவதாகத் தெரிவித்துள்ளது

பரோட்டாவுக்கு 18 சதவீதம், சப்பாத்தி, ரொட்டிக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி எனும் விவகாரம் சமூக ஊடங்களில் வைரலானது. ஹாட்ஸ் ஆஃப் பரோட்டா எனும் ஹேஷ்டேகையும் வைரலாக்கினர்.

இந்த விவகாரம் குறித்து மகிந்திரா நிறுவனத்தின் அதிபர் ஆனந்த் மகிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில், “ நாடு பல்வேறு சவால்களைச் சந்தித்து வரும் வேளையில், பரோட்டாவுக்கு ஏற்பட்ட கதியை நினைத்து நாம் வருத்தப்பட வேண்டுமா” எனத் தெரிவித்தார்.

பரோட்டாவுக்கு 18 சதவீதம் வரி விதித்தது ட்விட்டரில் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதப்பொருளானது. உணவு இனவாதம் என்றும், தென்மாநில மக்களை வஞ்சிக்கும் செயல் எனும் ட்விட்டரில் நெட்டிசன்கள் கொந்தளித்தனர்.

நெட்டிசன் ஒருவர் பதிவிட்ட கருத்தில், “புதிய ஜிஎஸ்டி வரியின்படி ரொட்டி, சப்பாத்திக்கு 5 சதவீதம். அதே மாவில் செய்யப்பட்ட கேரளா பரோட்டாவுக்கு 18 சதவீதம் வரி. பரோட்டா என்பது ரொட்டி இல்லை. பரோட்டாவைச் சமைக்க வேண்டும், ரொட்டியை சமைக்கத் தேவையில்லை. இந்திய அதிகாரிகளின் கண்டுபிடிப்பு” எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொருவர் பதிவி்ட்ட கருத்தில், “பரோட்டா என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் உச்சரியுங்கள். Parota, Parotha, Parontha, Paratha or Parantha? இதில் பரந்தா என்று வார்த்தையில் அதிகமான எழுத்து இருப்பதால் அதிகமான வரியா” எனக் கேட்டுள்ளார்.

மற்றொருவர் பதிவிட்ட கருத்தில், “கோதுமை மாவில் அமிர்தசரஸில் பூரி செய்கிறார்களே. அதில் கூடுதலாக உருளைக்கிழங்கும் வைக்கிறார்களே. அதற்கான வரியும் சேர்த்து 28 சதவீதம் வருமா” எனக் கேட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in