

கரோனா வைரஸ் பரிசோதனைகளை மேலும் அதிகரிக்க இந்திய மருத்துவக் கழகமான ஐசிஎம்ஆர்-க்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வழங்குமாறு மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தனுக்கு ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்.பி. சஞ்சய் சிங் வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் சஞ்சய் சிங் கூறியிருப்பதாவது:
இன்றைய தேதியின் தேவையென்னவெனில் கரோனா வைரஸ் பரிசோதனைகளை மேலும் அதிகரிப்பதே. இதற்காக ஐசிஎம்ஆர்-க்கு மாற்றப்பட்ட, திருத்தங்களுடன் கூடிய புதிய வழிகாட்டு நெறிமுறைகள் தேவை, எனவே மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ வர்தன் அளிக்க வேண்டும். தனக்கு கரோனா இருப்பதாக யாருக்காவது சந்தேகம் ஏற்பட்டால் அவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வசதி வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
நாடு முழுதும் நிறைய சோதனைச்சாலைகளுக்கு உரிமம் அளிக்க வேண்டும். மாநிலங்களுக்கு பரிசோதனைக் கருவிகள் அதிகமாக வழங்கப்பட வேண்டும். யாருக்கு தொற்று உள்ளது யாருக்கு இல்லை என்பது தெளிவாக்கப்பட வேண்டும். இல்லையெனில் நாம் நெருப்புப் பந்தின் மீது அமர்ந்து கொண்டிருப்பதாகவும் அது வெடிக்கும் வரை காத்திருப்பதாகவும் ஆகிவிடும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,458 கரோனா தொற்றுக்கள் புதிதாகத் தோன்றியுள்ளன. 386 பேர் மரணித்துள்ளனர். கரோனா எண்ணிக்கை 3,08,993 ஆக உள்ளது. இதில் 1,45,779 பேர் சிகிச்சையில் உள்ளனர். 1,54,330 பேர் குணமடைந்துள்ளனர்.