

திருப்பதி நகரில் கோவிந்தராஜ பெருமாள் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயில் திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. கரோனா வைரஸ் தொடர்பான ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், கோவிந்தராஜர் கோயில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், ஸ்ரீநிவாச மங்காபுரம் கல்யாண வெங்கடேச பெருமாள் கோயில், திருப்பதி கபிலேஷ்வரர் கோயில் என திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு கடந்த 10-ம் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டது. என்றாலும் ஆன்லைன், வாட்ஸ்-அப் மற்றும் தொலைபேசி தகவல் மூலமாக முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கோவிந்தராஜர் கோயிலில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இக்கோயிலின் நடை நேற்று காலையில் அடைக்கப்பட்டது. பிறகு கோயிலை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இப்பணி இன்றும் தொடரும் எனவும் நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் பக்தர்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10-ம் தேதி காளஹஸ்தி சிவன் கோயிலில் பணியாற்றி வந்த அர்ச்சகர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், கோயில் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.