

கொகோ கோலா, தம்ஸ் அப் ஆகிய குளிர்பானங்கள் உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிப்பதால் அவற்றை விற்க தடை விதிக்க வேண்டும். இந்தக் குளிர்பானங்களை பயன்படுத்த வேண்டாம் என்று மக்களுக்குத் தெரிவிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் உமேத்சின்பி சவுதா என்பவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ‘‘இந்த மனுவில் சம்பந்தமில்லாத காரணங்கள் இருக்கின்றன. மனுவில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் எந்தஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை’’ என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது. மேலும் இந்த 2 குளிர்பான பிராண்டுகளை மட்டும் தடை செய்ய கோருவதற்கு என்ன காரணம் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
எனவே, சட்டப் பிரிவு 32-ன்படி நீதிமன்ற நடைமுறைகளைத் தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும் எந்த அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் தவறான வழக்கு தொடுத்ததற்கு ரூ.5 லட்சம் மனுதாரருக்கு அபராதமும் விதித்துள்ளது. இந்த அபராதத் தொகையை ஒரு மாதத்துக்குள் நீதிமன்றக் கணக்கில் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.