Last Updated : 29 Sep, 2015 04:24 PM

 

Published : 29 Sep 2015 04:24 PM
Last Updated : 29 Sep 2015 04:24 PM

எல்லையில் சுவர் எழுப்பவில்லை: பாகிஸ்தான் புகாருக்கு இந்தியா மறுப்பு

ஜம்மு-காஷ்மீர் சர்வதேச எல்லையில் சுற்றுச்சுவர் எழுப்புவதாக பாகிஸ்தான் முன்வைத்துள்ள குற்றச்சாட்டை எல்லை பாதுகாப்புப் படை ஐ.ஜி, ராகேஷ் சர்மா திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும், "இது பாகிஸ்தான் கூறும் அடிப்படை ஆதாரமற்ற கதை" என விமர்சித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் 10 மீட்டர் உயரம் 135 அடி அகலத்தில் சுமார் 197 கி.மீட்டர் தொலைவுக்கு சுவர் எழுப்ப இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது மிகுந்த கவலையளிக்கிறது என்று ஐ.நா. சபையில் பாகிஸ்தான் குற்றம் சாட்டியது.

1948-ல் உருவாக்கப்பட்ட பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்துக்கு எதிராக இந்தியா செயல்படுவதாகவும். ஜம்மு-காஷ்மீர் பிராந்தியம் சர்ச்சைக்குரிய பகுதி. அங்கு சுற்றுச்சுவர் எழுப்பக்கூடாது. தற்போதைய தற்காலிக எல்லைக் கோட்டை நிரந்தரமாக்க சுற்றுச்சுவரை கட்ட இந்தியா திட்டமிட்டுள்ளது. இது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்துக்கு எதிரானது. இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து எல்லை பாதுகாப்புப் படை ஐ.ஜி. ராகேஷ் சர்மா கூறும்போது, "ஜம்மு-காஷ்மீர் சர்வதேச எல்லையில் சுற்றுச்சுவர் எழுப்புவதாக பாகிஸ்தான் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. மேலும், இது அடிப்படை ஆதாரமற்ற கதை.

தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தவே பாகிஸ்தான் இத்தகைய கதைகளைக் கூறுகிறது. எல்லைப்பகுதியில் உள்ள தரை நிலவரத்தை பொருத்தவரை அங்கு சுற்றுச்சுவர் எழுப்புவது சாத்தியமில்லை.

மேலும், எல்லையில் சுற்றுச்சுவர் எழுப்புவதால் மட்டும் தீவிரவாத ஊடுருவல்களை முறியடிக்க முடியாது. ஊடுருவல் முயற்சிகளை முறியடிப்பது தொடர்பாக ஆலோசனைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். எல்லையில் அமைக்கப்பட்ட வேலிகளை சீரமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது" என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x