

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மனநிலை சரியில்லாதவர் போல பேசி வருவதாக அம்மாநில பாஜக தலைவர் சதீஷ் பூனியா விமர்சித்துள்ளார்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்வராக அசோக் கெலாட் இருந்து வருகிறார்.
இந்நிலையில் ராஜஸ்தானிலும் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயல்வதாகக் குற்றம்சாட்டி முதல்வர் அசோக்கெலாட் 90-க்கும் மேற்ட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்களை தனியார் தங்கும்விடுதிக்கு அழைத்துச் சென்று தங்க வைத்துள்ளார்.
மேலும், மாநிலங்களவைத் தேர்தல் நடைெபறஇருக்கும் வேளையில் பாஜகவினர் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் வாங்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.
அசோக் கெலாட் கூறுகையில் ‘‘மாநிலங்களவைத் தேர்தல் 2 மாதங்களுக்கு முன்பே நடந்திருக்க வேண்டும். ஆனால் எந்த காரணமும் இல்லாமல் ஒத்திவைக்கப்பட்டது. பாஜகவின் குதிரை பேரம் முடியாததால் அப்போது ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் பாஜகவின் எண்ணம் ஈடேறாது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளனர்’’ எனக் கூறினார்.
இதற்கு அம்மாநில பாஜக தலைவர் சதீஷ் பூனியா பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது:
ராஜஸ்தானில் கடந்த சில நாட்களாக அரசியல் நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டு வருகிறது. மாநிலங்களவைத் தேர்தலுக்காக மாநில முதல்வரே இதனை அரங்கேற்றி வருகிறார்.
பொறுப்புள்ள பதவியில் அமர்ந்திருக்கும் ஒருவர் தேவையற்ற முறையில் அடிப்படையில்லாமல் பேசி வருகிறார். கடந்த சில நாட்களாக கூர்ந்து கவனித்து வந்தால் மனநிலை சரியில்லாதவர் போல பேசுகிறார். மனதில் தோன்றுவதையெல்லாம் பேசுகிறார். விரக்தியில் இருப்பதையே அவரது பேச்சுகள் காட்டுகின்றன.’’ எனக் கூறினார்.