Last Updated : 12 Jun, 2020 03:49 PM

 

Published : 12 Jun 2020 03:49 PM
Last Updated : 12 Jun 2020 03:49 PM

வங்கிக் கடன் தவணைத்தொகை வட்டி மீதான வட்டி விதிப்பு தள்ளுபடி செய்யப்படுமா?  - 3 நாட்களில் முடிவெடுக்க ஆர்பிஐ, நிதியமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல் 

லாக்டவுன் காலத்தில் வங்கிக் கடன் மாதத் தவணைகள் தாமதமாகச் செலுத்தப்படும் வேளையில் கடனுக்கான வட்டி தவிர தாமதத்திற்கான கூடுதல் வட்டி சேர்த்து வசூலிக்கபடுமா என்பதை தீர்மானிக்க 3 நாட்களுக்குள் நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டுமாறு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கேட்டுக் கொண்டது.

கரோனா லாக்டவுன் காரணமாக தடை விதிக்கப்பட்ட 6 மாத காலத்திற்கான வங்கிக் கடன் தவணைகளைக் கால தாமதமாகச் செலுத்தினால் வட்டிக்கு வட்டி விதிக்கப்படுமா இல்லையா என்பதை 3 நாட்களுக்குள் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் மத்திய ரிசர்வ் வங்கியையும் மத்திய நிதியமைச்சகத்தையும் அறிவுறுத்தியது.

கரோனா லாக்டவுன் காரணமாக மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கடன் தவணைகளை செலுத்த மே 31ஆம் தேதி வரை சலுகை வழங்கப்பட்டது. பின்னர் மே மாதம் ஊரடங்கு தளர்த்தப்பட்டு சில தொழில்கள் படிப்படியாக மீண்டும் தொடங்கின. எனினும், மக்களின் நிதி நெருக்கடி மேலும் அதிகரித்துவிட்டது. மேலும், ஏராளமான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வெளியேற்றி வருகின்றனர். இதனால், ஆகஸ்ட் மாதம் வரையிலான கடன் தவணைகளை செலுத்த ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை சலுகை வழங்கப்பட்டது. ஆறு மாதங்களுக்கும் வட்டி கூட ரத்து செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆறு மாத காலத்திற்கு கடன்களை ரத்து செய்ய முடியாவிட்டாலும் வட்டித் தொகையாவது ரத்து செய்யலாம் என பல தரப்புகளில் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கில் ரிசர்வ் வங்கி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், “கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டது கடனை தாமதமாக செலுத்துவதற்கான அவகாசம் மட்டுமே தவிர கடன் தள்ளுபடி அல்ல” என்று ஆர்பிஐ தெரிவித்தது, மேலும் வட்டியைத் தள்ளுபடி செய்தால் ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.

வங்கிகளில் கடன் பெற்ற பலரும் தவணை ஒத்திவைப்பு சலுகையை பயன்படுத்தினர். ஆனால் வங்கிகளோ, தவனை ஒத்திவைப்பு காலத்துக்கும் ஒரு வட்டியை வசூலிப்போம் என நடவடிக்கை மேற்கொண்டது. இது வங்கி கடன் பெற்றவர்களை பெரும் அதிர்ச்சி அடைய வைத்தது. வங்கிகளின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஆக்ராவைச் சேர்ந்த கஜேந்திர ஷர்மா என்பவர் மேற்கொண்ட இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அஷோக் பூஷன், கவுல் மற்றும் ஷா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தடைக் காலக்கட்டத்தில் கடன்கள் மீதான முழு வட்டியையும் தள்ளுபடி செய்வது பற்றியதல்ல இது, காலதாமத தவணைகளுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படுமா என்பது பற்றியதே இப்போதைய கேள்வி என்று நீதிபதிகள் கூறினர்.

கால தாமதமாக செலுத்தப்படும் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் முடிவை அடுத்த 3 நாட்களுக்குள் மத்திய நிதியமைச்சகமும் ஆர்பிஐ-யும்ஆலோசித்து எடுக்க நீதிபதிகள் அறிவுறுத்தி அடுத்த வாரத்துக்கு வழக்கை தள்ளி வைத்தனர்.

இந்த வழக்கு குறித்து ஒரு சமச்சீரான பார்வையை மேற்கொள்ள நீதிமன்றம் முயற்சி செய்வதாகவும் பரவலான அளவுகள் கடைப்பிடிக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.

மத்திய அரசுக்காக வாதாடிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஆர்பிஐயுடன் ஆலோசனை கோரியிருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், வட்டிக்கு வட்டி என்பது பற்றிய கேள்வியைத் தாண்டி ஆர்பிஐ பதில் போகுமானால் பிறகு ஏகப்பட்ட கருத்துகள் எழும், எங்கள் கேள்வி வட்டி மீதான வட்டி தள்ளுபடி செய்யப்படுமா என்பதே, என்று நீதிபதிகள் திட்டவட்டமாகக் கேட்டனர்.

அதாவது வட்டியை முழுதும் தள்ளுபடி செய்தால் நஷ்டம் அடையும் சரி, ஏற்கெனவே விதிக்கப்பட்ட வட்டி மீது காலதாமதத் தவணைக்கான வட்டியாக தொகை வசூலிக்கப்படுமா என்பதுதான் இப்போதைய கேள்வி என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

அதாவது கடன்களுக்கு தவணை மற்றும் வட்டி செலுத்துவதில் எந்த பிரச்சனையும் இல்லை. அதில் நீதிமன்றம் தலையிடவில்லை.

ஆனால் தவணை ஒத்திவைப்பு சலுகை காலத்துக்கும் வட்டி விதிக்கப்பட்டுள்ளதுதான் இப்போதைய கேள்வி. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகம் 3 நாட்களில் பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜூலை 17 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x